வாலாஜா அருகே அம்மன் வீதியுலாவில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சென்னை வாலிபர் கைது

3 hours ago 3

சென்னை: வாலாஜா அருகே அம்மன் வீதியுலாவின் போது தூப்பாக்கி காட்டி மிரட்டிய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று அம்மன் திருவீதியுலா வந்தது. அப்போது அங்குள்ள ரோட்டு தெருவில் வசிக்கும் விஜயா என்பவர் வீட்டின் அருகே சுவாமி செல்லவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விஜயாவின் பேரன் புவனேஸ்வரன் (20), விழா குழுவினரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி, ‘எனது பாட்டி வீட்டின் அருகே சாமி வரவில்லை, என்றால், அனைவரையும் சுட்டு விடுவேன்,’ என மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட வாலிபரை வாலாஜா காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரை சேர்ந்த பழனி என்பவரது மகன் புவனேஷ்வரன் என்பதும், தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

அவர் ஆன்லைனில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக பயன்படுத்தும் 9 எம்எம் ஏர்கன் வாங்கி உள்ளார். அதை காட்டி மிரட்டி உள்ளார் என்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால் அம்மன் வீதியுலாவில் பரபரப்பு ஏற்பட்டது.

The post வாலாஜா அருகே அம்மன் வீதியுலாவில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சென்னை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article