சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல வழங்கப்பட்ட உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணி பற்றி விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிடவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கேரளத்தின் தேவைக்காக கருங்கல் ஜல்லிகள், எம் சாண்ட் ஆகிய கனிமங்களை தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்ல நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 15 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கேரளத்தில் தரமான பாறைகள் கிடைக்கும் போதிலும் அவற்றை வெட்டி எடுக்க அனுமதிக்காமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தமிழக கனிம வளங்களை சூறையாட அரசே அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.