திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 5 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயநாடு, இடுக்கி உள்பட மலையோர பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அடுத்த 3 நாட்களுக்கு உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் ஏராளமான அணைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடிகள் உள்பட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வயநாடு, இடுக்கி உள்பட மலையோர பகுதிகளில் நிலச்சரிவு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மலையோர பகுதிகள் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மலையோர பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொல்லம், திருச்சூர், மலப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கனமழை மேலும் 5 நாள் நீடிக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
9 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கேரளாவில் தொடர் மழை காரணமாக 9 ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஓடும் அச்சன்கோவில் ஆறு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஓடும் வாமனபுரம் ஆறு, வயநாடு மாவட்டத்தில் ஓடும் கபினி ஆறு உள்பட 9 ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. எனவே இந்த ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
The post கேரளாவில் மேலும் 5 நாட்கள் கனமழை: நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உஷார் நிலை appeared first on Dinakaran.