
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சம்ரவட்டம் பகுதியில் இருந்த மதுக்கடை புலம்பரம் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட அந்த மதுக்கடை மீது கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில், கடையின் முன்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்தது. சிசிடிவி கேமரா சேதமடைந்தது.
இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மதுக்கடை மீது பைக்கில் வந்த 3 சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய புலம்பரம் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.