
ராஞ்சி,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இதன் காரணமாக நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். அதேவேளை, நக்சலைட்டுகள் திருந்தி வாழ அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பயனாகவும் அரசின் முயற்சிகளாலும் நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட்டின் லேட்கர் மாவட்டத்தில் தலைக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு ஆயுதங்களை கைவிட்டு இன்று போலீசில் சரணடைந்தார். அம்மாவட்டத்தை சேர்ந்த நக்சலைட்டு லக்வேஷ் கஞ்கு மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் இன்று ஆயுதங்களை கைவிட்டு லேட்கர் மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் சரணடைந்தார்.