திருவனந்தபுரம்: விஷுக்கனி தரிசனத்தை முன்னிட்டு இன்று சபரிமலை, குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில் உள்பட முக்கிய கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். சபரிமலையில் பூஜை செய்யப்பட்ட தங்க டாலர்கள் விநியோகம் இன்று தொடங்கியது. கேரளாவில் சித்திரை விஷு பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இதை முன்னிட்டு வீடுகளிலும், கோயில்களிலும் விஷுக்கனி தரிசனம் நடைபெறும். காய்கனிகள், பழ வகைகள், புத்தாடை, பணம், நகைகள் உள்பட பொருட்களை பூஜை அறையில் வைத்து காலையில் அதில் கண் விழிப்பது தான் விஷுக்கனி தரிசனம் ஆகும். இதை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இன்று சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை, குருவாயூர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், விஷுக்கனி தரிசனமும் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஷுக்கனி தரிசனம் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.
விஷுக்கனி தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கைநீட்டமாக நாணயங்களை வழங்கினர். இதற்கிடையே இன்று முதல் சபரிமலையில் பூஜை செய்யப்பட்ட தங்க டாலர்கள் விற்பனை தொடங்கியது. இன்று காலை சபரிமலை சன்னிதானத்தில் கோயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் வி.என். வாசவன் தங்க டாலர்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், தந்திரி, மேல்சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
2, 4 மற்றும் 8 கிராம் எடையுள்ள தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 2 கிராம் ரூ. 19,300க்கும், 4 கிராம் ரூ.38,600க்கும், 8 கிராம் ரூ.77, 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும்போது பக்தர்கள் ரூ.2000 முன்பணமாக கட்ட வேண்டும். இதன்பின் சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் தங்க டாலர்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூஜை செய்யப்பட்ட பின்னரே இந்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 18ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் வைகாசி மாத பூஜைகளுக்காக மே 14 ம் தேதி நடை திறக்கப்படும். விஷுக்கனி தரிசனத்தை முன்னிட்டு குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலிலும் இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
The post கேரளாவில் சித்திரை விஷு கொண்டாட்டம்; சபரிமலை, குருவாயூரில் பக்தர்கள் குவிந்தனர்: தங்க டாலர் விற்பனை துவக்கம் appeared first on Dinakaran.