புதுடெல்லி: சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம், ‘பெண்ணின் மார்பகத்தை பிடிப்பதும், பைஜாமா நாடாவை அவிழ்ப்பதம் பலாத்கார முயற்சிக்கு ஈடாகாது’ என அதிர்ச்சிகரமான தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், மீண்டும் ஒருமுறை அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு சர்ச்சையாகி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையும் பெற்றுள்ளது. கடந்த மார்ச் 17ம் தேதி பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவில், ‘சம்மந்தப்பட்ட பெண்ணும், ஆணும் வயதுக்கு வந்தவர்கள். பெண் எம்ஏ மாணவி. பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் சமயத்தில் பெண் மது குடித்துள்ளார். அவரது நண்பராக கூறப்படும் ஆணுடன் அவரது வீட்டிற்கு செல்லவும் பெண்ணே சம்மதித்துள்ளார்.
எனவே பிரச்னையை அவராகவே வரவழைத்துள்ளார். தனக்கு தானே பிரச்னையை ஏற்படுத்திக் கொண்டதால், பலாத்காரத்திற்கு அப்பெண்ணே காரணம்’ என கூறியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர், ‘‘ஜாமீன் வழங்க விரும்பினால் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஏன் கருத்துக்களை தெரிவிக்கிறீர்கள்? இந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்’’ எனக் கண்டித்து விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
The post பலாத்கார வழக்கில் சர்ச்சை கருத்து; அலகாபாத் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.