
புதுடெல்லி,
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மழை பொழிவு கிடைக்கும். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை, கேரளா என வட மாநிலங்களுக்கும் பரவும். கொளுத்தும் கோடைக்காலத்தை தொடர்ந்து தொடங்கும் பருவமழை என்பதால் இந்த தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம்.
இந்நிலையில் கேரளாவில் 27-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி நாட்டின் பிற பகுதிகளில் மழையை கொடுக்கும். பின்னர், செப்டம்பர் 17 ஆம் தேதி வடமேற்கு இந்தியாவில் இருந்து பின்வாங்கத் தொடங்கி, அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முழுமையாக விலகி விடும். ஆனால் நடப்பாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 87 செ.மீ. மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவு மழை இருக்காது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்தான் இந்த பருவமழை இருக்கும். மற்ற இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.