இந்திய ஏவுகணை தாக்குதல் என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ஆப்கானிஸ்தான் மறுப்பு

3 hours ago 1

காபூல்,

காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பதிலடியாக பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் கூறியிருந்தது. பாகிஸ்தானை இலக்காக கொள்ளப்பட்டு இந்தியா நடத்திய அந்த ஏவுகணை, தங்களுடைய நாட்டின் வழியே கடந்து சென்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மீதும் விழுந்தது என்றும் தெரிவித்து இருந்தது.

இது இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதலை உண்டு பண்ணும் நோக்கில் அமைந்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் கூற்றை ஆப்கானிஸ்தான் அரசு இன்று மறுத்துள்ளது. இந்தியா, தங்களுடைய நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என அதுபற்றி தலீபான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுபற்றி ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இனயதுல்லா கவாரிஜ்மி கூறும்போது, ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் உறுதியாக கூறிய விசயங்களை மறுத்துள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித நம்பக தன்மையும் இல்லை என குறிப்பிட்ட அவர், இதுபோன்ற கூற்றுகளில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் கூறினார். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகமும் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளியுள்ளது. தன்னுடைய நட்பு நாடுகள் மற்றும் எதிரி நாடுகள் எவை என்பதில் ஆப்கானிஸ்தான் தெளிவாக உள்ளது என்றும் உறுதியாக தெரிவித்து இருந்தது.

இதுபற்றி இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்து கூறும்போது, தவறாக வழிநடத்தும் இதுபோன்ற கூற்றுகள், இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உறவில் அழுத்தம் ஏற்படுத்தும்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து முறைப்படியான எந்தவித எதிர்ப்பும் இல்லாத சூழலில், அடிப்படை எதுவுமின்றி தூதரக உறவுகளில் பதற்ற நிலையை பாகிஸ்தான் உண்டு பண்ணுவது போல் தெரிகிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதேபோன்று, பல்வேறு இந்திய ராணுவ தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன என பாகிஸ்தான் கூறி வருவதிலும் உண்மையில்லை. அவை பொய்யானவை மற்றும் தெளிவாக ஜோடிக்கப்பட்டவை என்று மிஸ்ரி உறுதியாக கூறியுள்ளார்.

Read Entire Article