
மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த லிங்கேஷ், தனது மாமன் மதுசூதனன் கட்டுப்பாட்டில் வளர்கிறார். அவரது மகள் திவ்யாவுடன், லிங்கேசுக்கு நிச்சயதார்த்தமும் நடக்கிறது. இதற்கிடையில் லண்டனில் இருந்து தமிழ் கலாசாரத்தை ஆய்வு செய்ய வரும் லியா, லிங்கேஷ் மீது காதல் வசப்படுகிறார். லிங்கேசும் மனதை பறிகொடுத்து விடுகிறார். இருவரும் ஜோடியாக ஊருக்குள் சுற்றி திரிவது பிரச்சினைகளை உண்டாக்கிறது. ஆத்திரம் அடையும் மதுசூதனன் ஊர் மக்களை திரட்டி லியாவை விரட்டுகிறார். லிங்கேஷ் - லியா காதல் என்ன ஆனது? தனது மாமனை திருமணம் செய்யும் லட்சியத்தில் திவ்யா வென்றாரா? யாருடைய காதல் ஜெயித்தது? என்பது படத்தின் மீதி கதை.
கோபப்பார்வை, அடிதடி, அரைகுறை ஆங்கில பேச்சு என கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார் லிங்கேஷ். முறை பெண்ணா, காதலியா? என்ற சூழலில் அவரது நடிப்பு அசத்தல்.
முறை பெண்ணாக வரும் திவ்யா அழகான நடிப்பால் கவருகிறார். வெளிநாட்டு பெண்ணாக லியா தோற்றத்திலும், தமிழ் கலந்த ஆங்கில உச்சரிப்பிலும் வசீகரிக்கிறார்.
மதுசூதனன், காட்பாடி ராஜன், கஞ்சா கருப்பு, 'லொள்ளு சபா' மாறன், சித்தா தர்ஷன், செந்தமிழ் என அனைவருமே நிறைவான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
சாண்டி சாண்டெல்லோ இசையும், டோனிசென், வெங்கடேஷ் ஆகியோரின் ஒளிப்பதிவும் படத்துடன் ஒன்ற செய்கிறது.
இரண்டாம் பாதியில் நாடகத் தனமான காட்சிகள் தொய்வு தருகிறது. காட்சிகள் யூகிக்க முடிவது பலவீனம்.
இரு வேறு பெண்களின் உணர்வுகளை ஒருசேர திரைக்கதையில் கொட்டி, ஒரு முக்கோண காதல் கதையாக படத்தை இயக்கி கவனம் ஈர்க்கிறார் ஜெயலட்சுமி.