
சென்னை,
கிறிஸ் எவான்சின் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'கேப்டன் அமெரிக்கா'. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அடுத்தடுத்து பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதில், கேப்டன் அமெரிக்காவாக நடித்திருந்த கிறிஸ் எவான்சின் ஒப்பந்தம் 2019 ஆண்டோடு முடிவடைந்தது.
இதனால்,கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தில் கேப்டன் அமெரிக்காவாக நடித்திருந்த கிறிஸ் எவான்ஸ் தன்னுடைய பொறுப்பை (பால்கன்) ஆண்டனி மெக்கீயிடம் ஒப்படைத்திருப்பார்.
அதன்பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான 'பால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்' வெப் தொடரில் கேப்டன் அமெரிக்காவாக ஆண்டனி மெக்கீ நடித்து அறிமுகமானார். தற்போது இதனை வைத்து கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்' என்ற படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி வெளியாக உள்ளது.