கேட்ட உடனே கிடைக்கும்; மானம் காற்றில் பறக்கும்: காவு வாங்கும் கடன் செயலிகள்

19 hours ago 3
  • தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (47); தனியார் தொழில் நுட்ப நிறுவன மேலாளர். வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்று சொந்த வீடு வாங்கினார். பின்னர், அவசர தேவைகளுக்காக சில மொபைல் ஆப்ஸ்கள் மூலம் ₹10 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். தவணைத் தொகை மாத சம்பளத்தையும் தாண்டி விட்டது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடியில் குடும்பம் தவித்த நிலையில், இவரது மனைவி புனிதா (39) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கை சேர்ந்த தினேஷ் மானே (50) என்ற ஆசிரியர், மொபைல் ஆப் மூலம் ₹12,000 கடன் வாங்கியுள்ளார். திருப்பிச் செலுத்தாததால், அவரது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அவரது நண்பர்களுக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய தொடங்கினர். இதனால் அவமானம் அடைந்த அவர், அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.
  •  ஆந்திராவை சேர்ந்தவர் நரேந்திரன். திருமணத்துக்கு சில நாட்கள் முன்பு ஆன்லைன் கடன் செயலி மூலம் ₹2,000 கடன் வாங்கினார்.அதனை திருப்பி செலுத்தி விட்டார். ஆனால், பெரிய தொகையை வட்டியாக செலுத்துமாறு டார்ச்சர் செய்துள்ளனர். பின்னர் அவரது மனைவியை ஆபாசமாக சித்தரித்து அவரது நண்பர்களுக்கு அனுப்பி டார்ச்சர் செய்தனர். இதனால், திருமணமான 47 நாட்களிலேயே அவர் தற்கொலை செய்தார்.

தனியார் கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்ளும் இப்படிப்பட்ட நிகழ்வுகள், நாடு முழுவதும் ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வங்கிகளில் கடன் கிடைக்க நல்ல சிபில் ஸ்கோர் வேண்டும்… போதுமான ஆவணங்கள் வேண்டும்… அப்போதுதான் கடன் கிடைக்கும். ஆனால், தனியார் கடன் செயலிகள் பல இதையெல்லாம் கேட்பதே இல்லை. ஸ்மார்ட் போன் இருக்கா… இந்த ஆப்சை டவுன்லோடு பண்ணுங்க… விவரங்களை பதிவேற்றம் செய்யுங்கள்… அடுத்து, பட்டனை தட்டிய மாத்திரத்தில் வங்கிக் கணக்கில் கடன் தொகை வந்து விழுந்து விடும் என்ற இந்த அசுர வேக நடைமுறைதான் அவசர செலவுக்கு உதவுகிறது என நம்புகின்றனர் அப்பாவி மக்கள். ஆனால், கடனை வாங்கிய பிறகு, அதனை திருப்பிச் செலுத்திய பிறகும் கூட வட்டி செலுத்தவில்லை என கடன் கொடுத்த நிறுவனங்கள் மிரட்டத் தொடங்குகின்றன.

கந்து வட்டி, மீட்டர் வட்டியைப்போல் மிக அதிக அளவில் வட்டி மேல் வட்டி போட்டு சில ஆயிரம் கடன் தொகையை லட்சங்களாக உயர்த்தி விடுகின்றனர். இதன்பிறகு, போனில் தொடர்பு கொண்டு நெருக்கடி தருவது, தரக்குறைவாக திட்டுவது,வீட்டுக்கு நேரில் வந்து மிரட்டுவது, எல்லாவற்றையும் விட உச்ச பட்சமாக கடன் வாங்கியவர்களின் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்புவதுதான் உச்சபட்ச டார்ச்சராக உள்ளது. இதுதான் பெரும்பாலான கடன் தாரர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளி விடுகிறது.

அவசர தேவைக்கு கடன் வாங்குபவர்கள், உடனடியாக கடன் கிடைக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். பண நெருக்கடி மற்ற விஷயங்களை மறைத்து விடுகிறது. இதனால்தான் மோசடி ஆப்ஸ்களில் சிக்கி சீரழியும் நிலைக்கு அப்பாவி மக்கள் தள்ளப்படுகின்றனர். மேலும், காளான் போல் முளைத்து வரும் கடன் செயலிகள் அப்பாவி மக்களை எளிதாக ஈர்த்து விடுகின்றன. கடன் இல்லாமல் சமாளிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தாலும், வாட்ஸ் ஆப் அல்லது குறுஞ்செய்தி மூலம் ‘கடன் வேண்டுமா’ என கேட்டு அனுப்பப்படும் தகவல்கள் ஆசையை தூண்டி விடுகின்றன. எந்த ஆவணமும் இல்லாமல் கடன் கிடைப்பதால் எதைப்பற்றியும் யோசிக்காமல் வாங்கி விடுகின்றனர். அப்போது, கடன் தரும் நிறுவனம் எப்படிப்பட்டது? ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்றதுதானா என யோசிப்பதே கிடையாது.

கடன் வாங்கிய பிறகு ஒரு சில தவணை தவறினால் கூட, கடன் வசூல் ஏஜெண்டுகள் வீடு தேடி வந்து விடுகின்றனர். நேரடியாகவும், போன் மூலமும் மிரட்டல் விடுப்பது தொடர்கிறது. அப்படியும் கடனை திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், அவர்களை பொது வெளியில் அவமானப்படுத்தும் செயலில் கடன் வழங்கிய அமைப்புகள் இறங்கி விடுகின்றன. ஆண், பெண் பாரபட்சமின்றி மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை கடன் வாங்கியவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி அவமானப்படுத்துகின்றனர்.

கடன் வாங்குவதற்கு பதிவிறக்கம் செய்யப்படும் செயலி, என்னென்ன அனுமதி கேட்கிறது என்பதை ஆராயாமல் எல்லாவற்றுக்கும் ஓகே கொடுத்ததன் பலன் தான் இது. இதனால், கடன் வழங்கிய நிறுவனம், போனில் உள்ள தொடர்பு எண்கள், படங்கள் என அனைத்தையும் எடுத்து விடுகின்றன. அவமானப்படுத்துவதற்கு இதைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.

மோசடி கடன் செயலி நிறுவனங்களால் அப்பாவிகள் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றி அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. அந்த நிறுவனம் வெளியிட்ட ஆய்வில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் மூலம் மக்கள் அதிக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். 2020ம் ஆண்டில் 29,000 பேர் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். 2021ம் ஆண்டு இது 76,000 ஆக அதிகரித்தது என தெரிவித்துள்ளது. இதுபோல், சைபர் குற்றங்கள் குறித்து வெளியான தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்திலும், பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

2020ம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 14 சதவீத இந்தியர்கள், உடனடி கடன் வழங்கும் செயலிகளை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு இது 9 சதவீதமாக குறைந்திருந்தாலும், இது அபாயகரமான ஒன்றுதான் என ஆய்வறிக்கைகள் எச்சரிக்கை செய்துள்ளன. சமீபத்தில் நடந்த மற்றொரு ஆய்வில், கடன் கொடுத்த நிறுவனத்திடம் இருந்து மிரட்டல் வந்ததாக 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சிலர் கடன் வாங்குவதற்காக கொடுத்த தனிப்பட்ட விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த குகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிரான்கோ, ‘‘தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் தங்கள் கிளைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் ஏழை மக்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் கடன் தேவைக்காக வங்கி சாரா நிதி நிறுவனங்களையும், சிறு நிதி நிறுவனங்கள், நம்பகத்தன்மையற்ற கடன் செயலிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்’’ என எச்சரிக்கை செய்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கிகளில் அப்பாவி மக்கள் கடன் பெறுவதற்கான வழி வகைகளை அரசும், ரிசர்வ் வங்கியும் எளிதாக்குவதோடு, மக்களும் மோசடி கடன் செயலிகளை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

25% முதல் 200% வரை வட்டி
மொபைல் ஆப்ஸ் மூலம் கடன் பெற்றவர்களில் 45 சதவீதம் பேர், கடன் வட்டி மிக மிக அதிகமாக உள்ளது. கவலைக்குரியதாக உள்ளது என தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் வரை கடன் வசூலிக்கப்படுவதாக இவர்கள் கூறியுள்ளனர். 10 சதவீதம் பேர், 50 சதவீதம் முதல் 100 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், 20 சதவீத பயனாளர்கள், தாங்கள் வாங்கிய கடனுக்கு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் என, 2020 ஜூலை மற்றும் 2022 ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முறையாக விண்ணப்பிப்பது எப்படி?

  • ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள், அதன் செயலிகள் மூலமாக மட்டுமே கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
  •  கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் இணையதளத்தை சரி பார்க்க வேண்டும். வங்கி, நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் இணைய முகவரியின் தொடக்கத்தில் ‘https’ என இருக்கும். ஆனால், மோசடியான, பாதுகாப்பற்ற இணையதளங்களின் முகவரியில் ‘S’ இருக்காது. ‘http’ என மட்டுமே இருக்கும்.
  •  நிபந்தனைகளை படித்துப்பார்க்கவும்.
  •  கடன் வழங்கும்போதும், வழங்கிய பிறகும் வசூலிக்கப்படும் கட்டணங்கள், வட்டி விகிதம் போன்றவற்றை ஆராயவும். ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு மாறாக அநியாய வட்டி வசூலிக்கப்படுகிறதா? அல்லது மறைமுக கட்டணங்கள் உள்ளதா என பார்க்கவும்.
  •  ஆப்ஸ் மூலம் கடன் தொகைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆப்ஸ் எதற்கெல்லாம் அனுமதி கேட்கிறது என பார்க்கவும். தேவையற்ற அனுமதியை கோரினால் உஷாராக இருக்கவும்.

தயங்காதீங்க… புகார் பண்ணுங்க…
மோசடி கடன் செயலிகள் என்று தெரிந்தால் உடனடியாக அவற்றை பிளாக் செய்யுங்கள். அத்தகைய செயலிகளிடம் இருந்து வரும் அழைப்புகளை தவிர்த்து விடுங்கள். மேலும், அந்த ஆப்ஸ் குறித்து ரிசர்வ் வங்கியில் புகார் செய்யுங்கள். இது அந்த ஆப்சை தடை செய்யவும் மற்றவர்கள் ஏமாறுவதை தடுக்கவும் வகை செய்யும். மேலும், மோசடி ஆப்ஸ்களில் கடன் வாங்கி நெருக்கடிக்கு ஆளானால் தயங்காமல் போலீசில் புகார் செய்யுங்கள்.

ஆபத்தை அறியாமல் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்கள்
டிஜிட்டல் மயமாக உள்ள இன்றைய உலகில், போலி கடன் செயலிகள், மோசடி ஆப்ஸ்களை கண்டறிவது சவாலான விஷயமாக உள்ளது. இத்தகைய கடன் செயலிகளை கண்டறிவதற்காக வழிகள் வருமாறு:
மோசடி கடன் செயலிகள் இரண்டு விதமாக இருக்கின்றன. முதலாவதாக, மிக விரைவாக கடன் கிடைக்க வழி செய்வதாக கூறி, மிகுதியான கட்டணத்தை வசூலித்து ஏமாற்றி விடுகின்றனர். இதில் ஏமாந்தவர்களுக்க, கடன் செயல்பாட்டு கட்டணத்தை இழந்ததோடு போய்விடும். இரண்டாவது மிகவும் மோசம். அதாவது, இந்த கடன் செயலிகள் எளிதாக கடன் தருகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு மாறாக, மிக மிக அதிக வட்டி வசூலிக்கின்றன.

  • ஆவணம் தேவையில்லை: வருவாய் சான்று போன்ற எந்த வித ஆவணங்களும் இல்லாமல், ஆப்சில் பெயர், வயது, போன் எண், முகவரி போன்ற அடிப்படை விவரங்களை மட்டும் நிரப்பினால் உடனே கடன் வழங்கும் பெரும்பாலான ஆப்ஸ்கள் மோசடி ஆப்ஸ்களாகவே இருக்கின்றன.
  •  ரிசர்வ் வங்கி விதிகள் புறக்கணிப்பு: ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கடன் தரும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும். வட்டி நிர்ணயம், ஆவண நடைமுறைகள் போன்றவை இதில் அடங்கும். இவ்வாறு விதிகளை பின்பற்றாத கடன் செயலிகள், அமைப்புகள் குறித்து உஷாராக இருக்க வேண்டும்.
  •  இணையதளம்: சில கடன் செயலிகளுக்கு இணையதளம் இருக்காது. அல்லது அது போலியானதாக இருக்கும். இதனையும் கடன் வாங்குவோர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  •  கடன் ஒப்பந்தம்: கடன் வழங்குவதற்கு கடன் ஒப்பந்தம் அவசியமான நடைமுறை. கடன் தொகை, வட்டி போன்ற விவரங்கள் இதில் இருக்கும். ஆனால், மோசடி நிறுவனங்கள் இதனை பின்பற்றுவதில்லை.
  •  முன்கூட்டிய கட்டணம்: கடனுக்கு விண்ணப்பித்ததும், ஆவண சரிபார்ப்புகள் நடந்து கடன் வழங்குவது உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான், அதற்கான செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், ஆப்ஸ் மூலம் உடனடி கடன் வழங்கும் நிறுவனங்கள், முன்கூட்டியே கடன் செயல்பாட்டு கட்டணத்தை செலுத்துமாறு கோரும்.
  •  விமர்சனங்கள்: சில கடன் செயலிகள் குறித்து சந்தேகம் இருந்தால் இணையதளத்தில் தேடலாம். சம்பந்தப்பட்ட கடன் செயலி அல்லது நிறுவனம் குறித்து வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை படித்தாலே புரிந்து விடும்.

டெபாசிட் வட்டி தாராளம் கடன் வட்டியும் ஏராளம்
இந்தியாவின் மைக்ரோ பைனான்ஸ் நிலை என்ற நபார்டு ஆய்வறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில் வங்கிகளின் கடன் நிலுவை 32.53 சதவீதமாக குறைந்து விட்டது. 2020-21ல் இது 43.67 சதவீதமாக இருந்தது. அதேநேரத்தில், வங்கிகள் நழுவ விட்ட இந்த இடத்தை வங்கி சாரா நிதி நிறுவனங்களும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் பிடித்துக் கொண்டன. கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் திரட்டிய டெபாசிட் தொகை ₹91,789 கோடி.

இதில் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்கு 97 சதவீதம். வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான வட்டி உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கிய பிறகு, கவர்ச்சி வட்டியால் பலர் வங்கி சாரா நிதி நிறுவன சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கேற்ப இந்த நிறுவனங்கள் வழங்கும் கடன் தொகைக்கான வட்டியும் மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எவ்வளவு வட்டி வசூலிக்கின்றன என்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்கொலைகள்
மேற்கண்ட தற்கொலை புள்ளி விவரத்தில், 2022ம் ஆண்டில் மட்டும் கடன் சுமை, வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தால் 11,656 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. ஆனால், கடன் சுமை உட்பட பல தற்கொலைகள் பதிவாவதில்லை. மேலும், தினசரி கூலி தொழிலாளர்கள், குடும்ப தலைவி, சுயதொழில் முனைவோர் பலர் தற்கொலை செய்து கொள்ள கடன் சுமை முக்கிய காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ம் ஆண்டு வரையிலான தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2022 பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் தற்கொலை விவரங்களை வெளியிட்ட அமைச்சர் நித்யானந்த் ராய், கடன் சுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் 3 ஆண்டில் 25,000 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

The post கேட்ட உடனே கிடைக்கும்; மானம் காற்றில் பறக்கும்: காவு வாங்கும் கடன் செயலிகள் appeared first on Dinakaran.

Read Entire Article