
கவுகாத்தி,
ஐ.பி.எல் தொடரில் கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் ராஜஸ்தான் வீரர் வனிந்து ஹசரங்கா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த போட்டியின் போது என்னுடைய அடிப்படை திறனை வைத்துதான் சிறப்பாக செயல்பட்டேன். குறிப்பாக பந்துகளை ஸ்டம்பினை நோக்கி போட்டதாலே விக்கெட்டுகள் கிடைத்தது. இந்த போட்டியில் நான் விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்புடன் பந்து வீசினேன்.
குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தியது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் நான் தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய பல மொழி படங்களை பார்ப்பேன். அதில் புஷ்பா படத்திலிருந்து தான் இந்த ஸ்டைலை எடுத்துக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.