
மீரட்,
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் லிசாரி கேட் பகுதியில் உஜ்வல் கார்டன் காலனியை சேர்ந்தவர் முகமது ஷகீர். 7 மாதங்களுக்கு முன் இஞ்சோலி பகுதியை சேர்ந்த அர்ஷி (வயது 25) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் நடந்ததில் இருந்து தொடர்ந்து கணவரிடம், அவருடைய தாடியை மழிக்கும்படி அர்ஷி வற்புறுத்தி வந்துள்ளார்.
கணவரோ அதனை கண்டு கொள்ளவே இல்லை. தாடியுடன் பார்க்க நன்றாக இல்லை. அதனால், அதனை மழித்து விடுங்கள். இல்லையென்றால் ஒரு நாள், உங்களை விட்டு சென்று விடுவேன் என்றும் கணவரை அர்ஷி எச்சரித்து உள்ளார். ஆனால், மதகுருவாக இருந்து வந்த ஷகீர், அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், ஒரு நாள் மனைவியை காணாமல் பல இடங்களில் ஷகீர் தேடியிருக்கிறார். அப்போது, ஷகீரின் தம்பியுடன் அர்ஷி ஓடிப்போன விவரம் அறிந்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். அக்கம்பக்கத்தினருக்கு நடந்த விவரம் பற்றி தெரிந்து விடாமல் இருப்பதற்காக, உறவினர்களுடன் சேர்ந்து இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டார்.
ஆனால், அவர்களின் இருப்பிடம் தெரிய வரவில்லை. இதன்பின்னர், போலீசில் அவர்களை பற்றி புகார் அளித்துள்ளார். அர்ஷியின் குடும்பத்தினரிடமும் விவரங்களை தெரவித்து உள்ளார். ஆனால், அர்ஷியுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து விட்டோம் என பதில் வந்துள்ளது.
ரூ.5 லட்சம் வரதட்சணை தொகையை திருப்பி தர வேண்டும் என கேட்டு அர்ஷி மிரட்டி வருகிறார் என கணவர் ஷகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி விசாரித்து வருகிறோம் என போலீஸ் சூப்பிரெண்டு ஆயுஷ் விக்ரம் கூறியுள்ளார். விசாரணை அடிப்படையில், முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, குடும்பத்தினர் அளித்த நெருக்கடியாலேயே திருமணம் செய்து கொண்டேன் என்றும், தாடியை மழிக்க ஒப்பு கொண்டால் மட்டுமே தொடர்ந்து ஒன்றாக வாழ்வேன் என கணவரிடம் கூறியுள்ளார். இதற்காக கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனை பெரிய அளவில் எடுத்து கொள்ளாமல் ஷகீர் தவிர்த்து விட்டார்.
இந்த சூழலில், அவருடைய தம்பியான முகமது சபீர் (வயது 24) உடன் அர்ஷி கள்ளக்காதலை வளர்த்துள்ளார். சபீர் தாடி எதுவுமின்றி நன்றாக மழித்த நிலையில் காணப்பட்டார். இவர்களுடன் ஒன்றாக சபீரும் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில தனிப்பட்ட பொருட்களை எடுத்து கொண்டு அவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போனது ஷகீரையும், அவருடைய குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. மொபைல் போன்களும் அணைக்கப்பட்டு இருந்தன. இதனால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது என தெரிவித்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.