கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டாஸ் போடக்கூடாது? - ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி

1 month ago 12

மதுரை,

ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறார். கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குறித்து தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில், லிப் தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். தமிழகத்தில் கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று முறையிட்டனர்.

அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், தமிழகத்தில் எந்த குட்கா தயாரிப்பிற்கும் அனுமதி இல்லை. பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்து வருகிறது என தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, தற்போது கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களை பாதிக்க கூடிய அளவிற்கு விற்பனையும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

குட்கா பயன்பாட்டில் இருந்து பள்ளி மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இப்படியே விட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு விரைவில் போதைப்பொருட்களை தடை செய்வது குறித்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றமே பிறப்பிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Read Entire Article