
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி, அம்மாள் வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 5-ம் தேதி திருக்கல்யாணம், 6-ம் தேதி அறுபத்து மூவர் திருவீதி உலா, 9-ம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோவில் முன்பாக உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒவ்வொரு படித்துறையிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தெப்பக்குளத்தை சுற்றி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்து தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர். படித்துறையில் பெண்கள் அமர்ந்து விளக்கு ஏற்றி வழிபட்டனர்.