சூலூர்: கூலி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதனால் இரு மாவட்டங்களிலும் சுமார் 1 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதோடு மட்டுமின்றி இதனால் தினமும் ரூ.35 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும்.
கோவை மாவட்டம் சோமனூரில், கோவை திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமின்றி, விசைத்தறி தொழிலை சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய கூட்டமைப்பின் நிர்வாகிகள், ‘‘விசைத்தறி தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்தனர். பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இன்று இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் காடா துணி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 35 கோடி ரூபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கும் என சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர். மேலும் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு இது விஷயத்தில் உடனடியாக ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்துப் பேச வேண்டும். புதிய கூலி வழங்காவிட்டால் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு விதங்களில் போராட்டம் நடத்தப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
The post கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக் துவங்கியது: தினமும் ரூ.35 கோடிக்கு துணி உற்பத்தி பாதிக்கும் appeared first on Dinakaran.