![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38413970-p.webp)
சென்னை,
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதில், தேவா படம் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனின்போது கூறிய ஒரு வார்த்தை பூஜா ஹெக்டேவை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் விமர்சிக்க காரணமாக அமைந்திருக்கிறது.
அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவான 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தை பூஜா ஹெக்டே ஒரு தமிழ் படம் என்று கூறி இருந்தார். இதனையடுத்து, அல்லு அர்ஜுன் ரசிகர்கள், பூஜா ஹெக்டேவை விமர்சிக்க ஆரம்பித்தனர்.
தெலுங்கில் வெளியான 'ஆலா வைகுந்தபுரமுலோ'படம் தமிழில் 'வைகுண்டபுரம்' என்ற பெயரில் வெளியானது. இந்தியில் 2022-ம் ஆண்டு இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இதில், கார்த்திக் ஆர்யன் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் நடித்திருந்தனர்.