கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக 1 லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் உதவி: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

1 week ago 3

கூட்டுறவு மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்பு:

  • தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழை எளிய, நடுத்தர மக்கள்,சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்தம் பொருளாதார மேம்பாட்டிற்கென நாட்டிலேயே பல்வேறு முன்னோடித் திட்டங்களை நூறாண்டுகளுக்கும் மேலாக நமது கூட்டுறவு சங்கங்கள் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றன. மாநிலம் முழுவதும் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஏதுவாக, அனைத்து வகைக் கூட்டுறவுச் சங்கங்களும் நடப்பிலுள்ள பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்நிதியாண்டில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடன் உதவி வழங்கும்.
  •  விவசாயப் பெருங்குடி மக்கள் பயிர்க்கடன் பெறுவதற்கு தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து, ஒரு வார காலத்திற்குள் அக்கடனைப் பெறும் நடைமுறையே தற்பொழுது இருந்து வருகிறது. இந்நடைமுறையில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, இணையவழியில் பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையும் தருமபுரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
  •  நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூபாய் ஐந்து இலட்சம் வரை கடன் வழங்கப்படும்.
  •  விவசாயிகளின் விளை பொருட்களைச் சேமித்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் ஏதுவாகக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகக் கடனுதவி வழங்கப்படும்.
  •  பொருளாதாரத்தில் பின்தங்கிய 1000 மகளிருக்கு அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ (இ ஆட்டோ) கொள்முதல் செய்வதற்குக் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக தலா ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
  •  நட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் “உறுப்பினர் ஆதரவு திட்டத்தின்” கீழ் இலாபம் ஈட்டும் சங்கங்களாக மாற்றப்படும்
  •  கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு இணைய வழி சேமிப்புக் கணக்கு தொடங்குதல், கடன் அட்டை வழங்குதல், கைபேசி வங்கிச் சேவை முதலிய சேவைகள் வழங்கப்படும்.
  •  மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் அனைத்துக் கிளைகளிலும் தேவையின் அடிப்படையில் தனிநபர் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும்.
  •  வசிப்பிடத்திற்கு அருகிலேயே விவசாயிகளுக்குத் தேவையான சேவைகளை வழங்கிட ஐந்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் கிளைகள் தொடங்கப்படும்.
  •  விவசாயிகளிடமிருந்து எண்ணெய் வித்துக்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, மதிப்புக் கூட்டி தரமான எண்ணெயைக் குறைவான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஏதுவாக நான்கு எண்ணெய் உற்பத்தி அலகுகள் ரூபாய் ஐம்பத்தி மூன்று லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
  •  ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்தொன்பது லட்சம் மதிப்பீட்டில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் அலகுகள் புதிதாக அமைக்கப்படும்.
  •  ரூபாய் எழுபது இலட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளிடமிருந்து பெறும் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வண்ணம் இரண்டு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் நவீனமயமாக்கப்படும்
  •  விரைவு வணிகம் வாயிலாக நுகர்வுப் பொருட்கள் பொதுமக்களின் வீட்டிற்கே விநியோகம் செய்யப்படும்.
  •  ரூபாய் இருபத்தைந்து லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் கடலூர் மண்டல அலுவலகத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.
  •  ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்தாறு இலட்சம் மதிப்பீட்டில் நீலகிரி, மயிலாடுதுறை, விருத்தாசலம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
  •  ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் திறன் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
  •  ரூபாய் ஆறு கோடியே இருபத்தைந்து லட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பத்து கிளைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்
  •  ரூபாய் பதினேழு கோடி மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
  •  ரூபாய் நாற்பது லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கோயம்பேடு குளிர்பதனக் கிடங்கு பொலிவூட்டப்படும்.
  •  கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 2500 நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்களைப் பெற 2500 நியாய விலைக் கடைகள் பொலிவூட்டப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறுப்பட்டுள்ளது.

The post கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக 1 லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் உதவி: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article