குதிகால் வலியை தவிர்க்க!

3 weeks ago 9

நன்றி குங்குமம் டாக்டர்

பாதத்தின் அடியில் ஏற்படும் வலியே குதிகால் வலி எனப்படுகிறது. இந்த வலியானது சிலருக்கு காலையில் படுக்கையை விட்டு எழுந்து பாதத்தை நிலத்தில் வைக்கும்போது கடுமையாக இருக்கிறது. தொடர்ந்து நடக்கும்போது வலி குறைந்து விடுகிறது எனில் இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் பிளான்டர் ஃபாசிடிஸ் (Planter Fascitiis) என்று மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. இதை குதிவாதம் என்றும் சிலர் கூறுகின்றனர். பொதுவாக வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் நோய். ஆனால் இது மூட்டுக்களில் ஏற்படும் நோயல்ல. எனவே உண்மையில் வாதம் அல்ல. பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள சவ்வுகளின் அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. எனவே இது ஆபத்தான நோயல்ல. இந்நோய் குறித்து தெரிந்து கொள்வோம்.

குதிகால் வலியின் அறிகுறிகள்

இந்நோயின் முக்கிய அறிகுறி பாதத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் வலிதான். சிலவேளைகளில் அப்பகுதி சிவக்கலாம், வீக்கம் ஆகலாம் அல்லது சூடாக இருப்பதாக உணரக் கூடும். இவை அழற்சியின் அறிகுறிகளாகும். பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியால்தான் இந்நோய் ஏற்படுகிறது.
முன்பே சொல்லியது போல முக்கியமாக அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து முதல் அடி எடுத்து வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் நாளடைவில் வலி நாள் முழுவதும் துன்பம் தரக்கூடும்.

குதிகால் வலி ஏற்படக் காரணம்

குதிகால் வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. குதிகால் பகுதியிலும் காலின் கெண்டைப் பகுதியிலும் உள்ள தசைகளின் இறுக்கம் காரணமாக இருக்கலாம். அல்லது பாதப்பகுதியின் தளர்ச்சியும் காரணமாகலாம். அல்லது நீங்கள் செய்யும் உடற்பயிற்சியைத் தவறாகச் செய்வதும் காரணமாகலாம். அல்லது உங்கள் பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவாகவும் இருக்கலாம்.

உதாரணமாக மிக நீண்ட தூரம் நடத்தல், ஓடுதல், அதிவேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகளாகவும் இருக்கலாம். மேலும், பொருத்தமற்ற காலணியை உபயோகிப்பதும் குதிகால் வலி ஏற்பட ஒரு காரணமாகலாம். அல்லது உங்கள் தொழில் காரணமாகவோ அல்லது பொழுதுபோக்குப் பழக்கம் காரணமாகவோ, குதிக்காலுக்குரிய சவ்வுக்கு அதிகவேலை கொடுத்து ஊறு விளைவிப்பதாலும் குதிகால் வலி ஏற்படலாம்.

சிகிச்சை முறைகள்

முதலில் காலணியில் கவனம் செலுத்தி உங்கள் காலுக்கு ஏற்ற காலணிகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணி உங்கள் உள்ளங்காலின் இயற்கையான வளைவுக்கு இசைந்து ஒத்தாசை வழங்கும் அமைப்புடையதாக இருக்க வேண்டும். குதிகால் வலி ஏற்பட்டுள்ள விளையாட்டு வீரர்கள், கால்களுக்கு அதிகமாக வேலை கொடுப்பதைக் குறைக்க வேண்டும். அதாவது பாய்தல், ஓடுதல், துள்ளல் போன்றவற்றைச் செய்யும் நேரத்தைக் குறைக்க வேண்டும். காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடப்பதற்கு முன்னரே சில பயிற்சிகளை செய்ய வேண்டும். அதற்கு, எழுந்தவுடன் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து மசாஜ் செய்தால் எழுந்து நடக்கும்போது வலி குறைவாக இருக்கும்.

அடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும். இவை நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிகால்வலிக்கு உதவும். இதற்கு, இரு கைகளையும் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரைத் தள்ளுங்கள். தள்ளும்போது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னிருக்கும் கால்களின் குதிப் பகுதியில் பாரம் தங்குமாறு செய்யுங்கள். அடுத்த தடவை கால்களை மாற்றி வைத்துச் செய்யுங்கள்.

அடுத்த பயிற்சியின்போது உங்கள் கைகள் சற்று மடிந்திருக்க சுவரைத் தள்ளுங்கள். இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமாறு செய்யும். உண்மையில் இவை உங்கள் தசைகளைப் பலமுறச் செய்து அதனால் எதிர்காலத்தில் வலிகள் தொடர்ந்து வேதனை அளிப்பதைக் குறைக்க உதவும்.இன்னுமொரு பயிற்சி சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள். உங்கள் குதிகால் நிலத்தில் படும்படி மடித்து உட்கார்ந்து கொண்டு சோடா மூடியை கால் விரல்களால் எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்குள் போடுங்கள். இது நல்ல பலனைத் தரும் பயிற்சியாகும்.

குதிகாலில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்க ஐஸ் மசாஜ் சிலருக்கு உதவக் கூடும். ஒரு சிறிய பேப்பர் கோப்பையில் நீரை வைத்து குளிர்சாதனப் பெட்டி மூலம் ஐஸ்கட்டி ஆக்குங்கள். பின்னர், கோப்பையிலிருந்து ஐஸ்கட்டி வெளியே தெரியும் பகுதியை பாதத்தின் வலிக்கும் இடத்தின் மேல் வைத்து அழுத்துங்கள். மிதமான அழுத்தத்துடன் சுற்றுவட்டமாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒத்தி எடுக்க வேண்டும். இதுவும் குதிகால் வலியைத் தணிக்க உதவும். வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

தொகுப்பு: ரிஷி

The post குதிகால் வலியை தவிர்க்க! appeared first on Dinakaran.

Read Entire Article