புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், சாங்லி மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் அஜித் பவார், ‘கடந்த 2014ல், அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ஆர்ஆர் பாட்டீல், நீர்ப்பாசனத்துறையில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்ததாக கூறி எனக்கு எதிராக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டு என் முதுகில் குத்தினார். அந்த உத்தரவு கடிதத்தை, அப்போது முதல்வராக இருந்த பாஜவின் தேவேந்திர பட்னவிஸ் என்னிடம் காண்பித்தார்’ என்றார்.
இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊழல் கறை படிந்தோரை சுத்தப்படுத்தும், பாஜவின் ‘வாஷிங் மிஷின்’ நாடு முழுவதும் அந்த வேலையை சிறப்பாக செய்து வருகிறது. இருப்பினும், மகாராஷ்டிராவில் பாஜ வாஷிங் மிஷின் மிக அதிக சக்தியுடன் செயலாற்றி வருகிறது. கடந்த 2014க்கு முன், மகாராஷ்டிரா மாநில நீர்ப் பாசனத்துறை அமைச்சராக இருந்த அஜித் பவார் மிகப் பெரியளவில் ஊழல் செய்து விட்டதாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜ கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.
70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்து விட்டதாக, பாஜ குற்றம் சுமத்தியது. இந்நிலையில், கடந்தாண்டு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அஜித் பவார் உள்ளிட்ட பல எம்எல்ஏக்கள், ஆளும் பாஜ – சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேஜ கூட்டணியில் இணைந்தனர். இவர்களை ‘பிளாக்மெயில்’ மூலமும் பலவந்தப்படுத்தியும் தம்முடன் பாஜ சேர்த்துக் கொண்டது. இது, ரகசிய காப்பு பிரமாணத்தையும், அலுவல் ரகசிய காப்பு சட்டத்தையும் மீறும் செயல். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கூட்டணியில் சேர்க்க அஜித்பவாரை ‘பிளாக்மெயில்’ செய்த பாஜ: காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.