‘‘மலராத தாமரை கட்சியில் முக்கிய நிர்வாகிகளுக்குள் அதிகரித்து வரும் பனிப்போரால் அதிருப்தியில் தொண்டர்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே, உண்மை தானா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியத்தில் மலராத தாமரை கட்சியில் மாவட்ட தலைவருக்கும், மாநில நிர்வாகிக்கும் இடையே நாளுக்கு நாள் பனிப்போர் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் 2வது கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் இவர்கள் மீதும் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்…
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தூக்கி விடலாம் என அந்த மாநில நிர்வாகி இப்போதில் இருந்தே திரைமறைவில் அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்காரு… இந்த தகவல் தெரிய வந்த மாவட்ட தலைவரும், மாநில நிர்வாகி பதவியில் இருந்து எப்படியாவது அவரை தூக்கி விட வேண்டும் என அதற்காக காய் நகர்த்தி வருகிறார். இருவரும் கட்சி மேலிடத்தில் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இருவரையும் தலைமை பெரிதாக கண்டு கொள்ளவில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிரசவ மருத்துவமனையில் என்ன பிரச்னையாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி மருத்துவ சேவைக்கு பெயர்பெற்றது. இங்குள்ள பிரசவ மருத்துவமனையில் உள்ளூர் கர்ப்பிணிகள் மட்டுமின்றி அண்டை மகளிரும் வருவார்கள். முன்பெல்லாம் பாரபட்சமற்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாம். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டதாம். பல்வேறு நிபந்தனை வெளியூர் மகளிருக்கு விதிக்கப்படுகிறதாம். அதுமட்டுமின்றி பிரசவத்துக்கு அட்மிட் ஆன கர்ப்பிணிகளின் உறவினர்களிடம் கட்டாய வசூல் நடக்கிறதாம்.
பிளஸ் வாரிசு என்றால் 1000 ப-விட்டமினும், மைனஸ் குழந்தை எனில் 500 ப-விட்டமினும் பெறப்படுகிறதாம். இவ்வாறு அடாவடி வசூலில் ஈடுபடும் ஊழியர்களின் பட்டியலை சமூக விரும்பிகள் பட்டியல் எடுத்து உள்ளிருப்பு அதிகாரியிடம் கொடுத்தார்களாம். பெயரளவில் மட்டுமே நடவடிக்கை இருந்ததாம். கட்டாயம் வேண்டாம்… தந்தால் வாங்குங்கள்… என்ற வாய்மொழி உத்தரவால் வசூல் ஊழியர்கள் கவலையின்றி உலாவுகிறார்களாம். ஆனால உறவுகளோ புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி கோஷ்டிப்பூசல் விவகாரம் என்ன..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்ட இலைக்கட்சியில் கோஷ்டிப்பூசல் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவது கட்சியினர் அறிந்ததே. மாஜி மீசைக் காரருக்கும், தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவிற்கும் சுத்தமாக ஒத்துபோகவில்லையாம். மீசைக்காரர் மீண்டும் தலை எடுத்து தனி ஆவர்த்தனம் செய்து விடக்கூடாது என்பதில் சிட்டிங் தரப்பு ரொம்ப ரொம்பவே கவனமாய் இருக்கிறதாம். இதனால், மீசைக்காரர் தரப்பு குமுறிக் கொண்டே என்ன உள்குத்து செய்யலாம் என ஆலோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
கடந்த வாரம் தலைமையின் உத்தரவுப்படி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் துவங்கும் முன்பு சிட்டிங் தரப்பு, எதிர்தரப்பினரின் பெயர்களை புறக்கணிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தை துவக்க விடாமல் தகராறில் ஈடுபட்டது. ஒருகட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடப்பது மாதிரி தெரியவில்லை என கட்சியினர் சிலர் இடத்தை காலி செய்ய, வேறு வழியின்றி இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தனராம் இலையின் மாவட்ட சீனியர்கள். இப்பவே மல்லுக்கட்டு வரை வந்த நிலையில், தேர்தல் நெருங்க, நெருங்க என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என இலைக்கட்சியினர் டென்ஷனாகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவருக்கு கூடுதல் பாதுகாப்பு வேணுமாமே..’’ என இழுத்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவர், எதிர்கட்சி தலைவாக இருப்பதால், அவருக்கு அரசாங்கம் கூடுதல் பாதுகாப்பு கொடுத்திருக்காம்… ஒரு ஸ்பெஷல் பாதுகாப்பு அதிகாரி, 2 கூடுதல் ஸ்பெஷல் பாதுகாப்பு போலீசார், அதோடு எஸ்.,ஐ. தலைமையில் 2 பிஸ்டல் துப்பாக்கியுடன் 5 பேர் என மொத்தம் 8 பேர் பாதுகாப்பு பணியில ஈடுபடுறாங்களாம்.. இதுதவிர சேலம் நெடுஞ்சாலை நகர், எடப்பாடி சிலுவம்பாளையம், சென்னை பசுமை இல்லம் என 3 இடங்களிலும் 24 மணி நேரமும் ஷிப்ட் அடிப்படையில், தலா 2 பேர் பாதுகாப்பு பணியில் இருக்காங்களாம்..
அதோடு சிஆர்பிஎஸ் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீசார் படையை சேர்ந்த 4 பேர் எஸ்எல்ஆர் என்ற அதி நவீன துப்பாக்கியுடன் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபடுறாங்களாம். ஆனால், தன்னோடு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என இலைக்கட்சி தலைவர் ரொம்பவே ஆசைப்படுறாராம்.. சிஎம்மாக இருந்த போது தன்னை சுற்றிவரும் பாதுகாப்பு படை போன்று இருந்தால் கம்பீரமாக இருக்குமுன்னும் நினைக்கிறாராம்.. இந்நிலையில் தான், அவரது சென்னை வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துச்சாம்..
இதனையே சாக்கா வச்சி, கூடுதல் பாதுகாப்பை கேட்டுடலாமுன்னு முடிவு செஞ்சிருக்காராம்.. அதோடு நில்லாமல் இலைக்கட்சிக்காரங்க ஆளுநரிடம் நேரில் கோரிக்கையும் வச்சிருக்காங்களாம்.. அந்த நேரத்தில் மக்கள் மனசு என்ன சொல்லுதுன்னும் ஆளுநர் கேட்கிறாராம்.. இது ஒரு நல்ல கேள்வின்னு நினைச்சிக்கிட்டு, மக்கள் மாற்றத்தை விரும்புறாங்கன்னு ஒரு உருட்டு உருட்டிட்டு வந்தாங்களாம் இலைக்கட்சிக்காரங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் ரீல்ஸ் மோகம் புனித தலங்களாக வழிபடும் கோயில்களையும் விட்டு வைப்பதில்லை போல..’’ என சிரித்துக்கொண்டே கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஆமா.. இன்றைய இளையதலைமுறையினர் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பெருமையாக கருதுகின்றனர். அதற்கு கிடைக்கும் லைக்குகளுக்கு மின்மினி பூச்சிபோல் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் வரும் பின்விளைவுகளை பற்றி யோசிப்பதில்லை.
சமீபத்தில் அல்வா நகரில் நடந்த ஒரு சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. அல்வா நகரின் அடையாளம் தான் அந்த ஊரில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில். அந்த ஊரின் பெயர் வரக்காரணமும் இந்த கோயில் தான். இவ்வளவு பிரசித்தி பெற்ற புனித தலத்தின் உள்ளே ஒரு சிறுவனும், சிறுமியும் ஆடிப்பாடி அதை ரீல்ஸ் ஆக்கி சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். மன அமைதிக்காகவும், வேண்டுதலை நிறைவேற்றவும் செல்லும் ஆன்மிக தலங்களில் இப்படி எல்லாம் ரீல்ஸ் எடுத்து பரவ விடுகிறோமே என்று சற்றும் சிந்திக்கவில்லை.
விஷயம் தற்போது சைபர் கிரைம் போலீஸ் வரை புகார் போயிருக்கிறது. இதற்கு வழக்கு, கைது என வந்தால் இந்த இளம் தலைமுறையின் எதிர்காலம் என்னவாகும். கோயிலில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி இருந்த போதிலும் இந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. தற்போது கேமிரா பதிவுகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்ந்து வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
The post கூடுதல் பாதுகாப்புக்கு அடிபோடும் இலைக்கட்சி தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.