கூடலூர் வழியாக மைசூர் செல்லும் சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை கொம்பன் யானை

2 weeks ago 3

*பொதுமக்கள் அச்சம்

கூடலூர் : கூடலூர் வழியாக மைசூர் செல்லும் சாலையில் வாகனங்களை கொம்பன் யானை வழி மறிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சாலை ஓரத்தில் காணப்படும் மான்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை ரசித்து செல்கின்றனர்.

சில நேரங்களில் சாலை ஓரத்தில் தெரியும் காட்டு யானைகள் வாகனங்களை விரட்டுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதியில் மங்களவாடி என்ற இடத்தில் ஒரு கொம்பன் காட்டு யானை அடிக்கடி தொடர்ந்து உலா வருகிறது.

இந்த யானை சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு பொருட்களை எடுப்பதும் கனரக வாகனங்களை தார்ப்பாய்களை இழுத்து அதில் உள்ள உணவு பண்டங்களை தின்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த சம்பவம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்கள், பேருந்து ஓட்டுநர்கள், இருசக்கர வாகனத்தில் செல்லும் பயணிகள் மற்றும் இதர வாகன ஓட்டுனர்கள் அச்சத்தில் சென்று வர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நேரம் இந்த கொம்பன் யானை ஹாரன் அடிக்கும் வாகனங்களை ஆக்ரோஷத்தில் கோபத்துடன் துரத்தி தாக்குகிறது.

இந்நிலையில் ரோந்து செல்லும் வனத்துறையினர் வாகனத்தையும் தாக்குவதற்கு முற்பட்டு வருகிறது, இதனால் வனத்துறையினரும் அந்த கொம்பன் யானை கண்டு சற்று அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பந்திப்பூர் புலிகள் காப்பக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘தமிழக எல்லையில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இப்பகுதிக்கு கொம்பன் யானை வந்துள்ளது என்றும் உயரதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்பு இந்த கொம்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் கூறினர்.

உதகையில் இருந்து மைசூர் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் இதர வாகன பயணிகள் உயிருக்கும், அவர்களது வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை நிலவுகிறது.

இரு மாநில வனத்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக கொம்பன் யானையை சாலை பகுதிக்கு வராமல் அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post கூடலூர் வழியாக மைசூர் செல்லும் சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை கொம்பன் யானை appeared first on Dinakaran.

Read Entire Article