கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் பாரம்பரிய நெல் விவசாயத்தை காக்க அரசு உதவ வேண்டும்

18 hours ago 2

*விவசாயிகள் கோரிக்கை

கூடலூர் : கூடலூர் பகுதியில் குறைந்து வரும் பாரம்பரிய நெல் விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் அய்யன் கொள்ளை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மவுண்டாடன் செட்டி பழங்குடியின மக்கள் காலம் காலமாக பாரம்பரிய நெல் விவசாயத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். பல நூறு தலைமுறைகளாக இப்பகுதிகளில் வசிக்கும் இவர்கள் முழுமையான விவசாயிகள் ஆவர்.

நெல் விவசாயம் இவர்களது முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வந்துள்ளது. பாரம்பரிய நெல் வகைகளான கந்தகசால், மர நெல், கொடுவாயில், சிந்தாமணி, பாளி, சீரகசால், கருவாலி, சோத்து வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு வந்துள்ளனர்.

ஆரம்ப கால கட்டங்களில் தங்களது சொந்த தேவைகளுக்காக நெல் விவசாயம் செய்த இடங்கள் காலப்போக்கில் விற்பனைக்காகவும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டனர். நெல் விவசாயத்துடன் கோடை காலத்தில் காய்கறி பயிர்களையும் விவசாயம் செய்து வருகின்றனர்.
பல நூறு வருடங்களாக இயற்கை வேளாண் முறையிலேயே நெல் விவசாயம் காய்கறி விவசாயத்தையும் மேற்கொண்டு மண்ணையும் நீரையும் பாதுகாத்து வந்துள்ளனர்.

கால மாற்றத்தில் பாரம்பரிய நெல் விவசாயம் குறைந்து வருவதாகவும், ஐஆர் 20, பொன்னி போன்ற ரகங்களை பல விவசாயிகள் விவசாயம் செய்வதாகவும், பல விவசாயிகள் நெல் விவசாயத்தை விட்டு வாழை மற்றும் பாக்கு விவசாயத்துக்கு மாறி உள்ளதாகவும், பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு அரசு உரிய உதவிகளை வழங்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாடந்துறை பகுதியை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தியாளர் குழு செயலாளர் ரகுநாதன் கூறியதாவது: கூடலூர், பந்தலூர் அய்யன் கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஹெக்டர் நிலங்களில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். பாரம்பரிய நெல் விவசாயம் இயற்கை வேளாண் முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் மண்ணும் நீரும் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதிக லாபத்திற்காக மேற்கொள்ளப்படும் வாழை உள்ளிட்ட பணப் பயிர்கள் விவசாயத்தால் மண் மற்றும் நீரின் தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் பொருளாதார மாற்றம் காரணமாக விவசாயிகள் லாபம் தரும் விவசாய பயிர்களில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.

இதில் சில நேரங்களில் பெரும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டி உள்ளது. பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு மானியம் உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைப்பதில்லை. யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஒரு புறம் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கூடலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நெல் ஆராய்ச்சிகள் கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு எந்த வித முன்னுரிமையும் கிடைக்கவில்லை.கடந்த காலங்களில் கூடலூர் பகுதி அனைத்தும் நெற்களஞ்சியங்களாக இருந்துள்ளது.

இங்கு இருக்கும் பல கிராமங்களின் பெயர் பொன் வயல், தேன் வயல், மான் வயல், புத்தூர் வயல், சுண்டவயல், குனில் வயல், வேடன் வயல், ஆலவயல், காவிதி வயல், கோத்திர வயல் என்று வயல்களின் பெயரிலே இருந்து வருகிறது. இத்தனை பெருமையும் பாரம்பரியமும் இருந்தும், தற்போது மிக சிறிய அளவிலேயே நெல் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய விவசாயம் செய்கின்ற விவசாயிகளை மேம்படுத்த வேளாண்மைத்துறை எந்த வித மானியமும் தருவதில்லை.

தார் பாய் மானியமாக வழங்கினால் கூட நெல் மணி அடிக்க உதவும். வேலையாட்கள் குறைந்து வரும் நிலையில் வயல்களை உழுதல், நடும் பணிகள் மற்றும் அறுவடை போன்றவற்றிற்கு இயந்திரங்களை நம்பி உள்ளதால் அதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளை பாதுகாக்கவும், முற்றிலும் இயற்கை முறையிலான இந்த விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கவும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் பாரம்பரிய நெல் விவசாயத்தை காக்க அரசு உதவ வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article