புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பாலானவை பாஜ ஆட்சி அமையும் என தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது. 4வது முறையாக கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பார் என்று ஆம் ஆத்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. இதுவரை வெளியிடப்பட்ட பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜ டெல்லியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. ஆட்சியமைக்க பெரும்பான்மை இடங்கள் 36. ஆனால் பாஜ 45 இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் அதிகம். அவர்களை குறிவைத்து பாஜ இடைவிடாது முன்னெடுத்த பிரசாரம், வாக்குறுதிகள், பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ஆகியவை பாஜவுக்கு கை கொடுக்கும் என்கிற நம்பிக்கை அக்கட்சியினருக்கு இருக்கிறது. மேலும் யமுனை நதிநீரை பாஜ நச்சாக்கி விட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மியும் காங்கிசும் தனித்தே தேர்தலை எதிர்கொண்டதால் பாஜ எளிதாகவே வெல்லும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்று தேர்தல் வியூக வல்லுநர்கள் சொல்கின்றனர்.
ஆனால் எது எப்படி இருந்தாலும் எக்ஸிட் போல் முடிவுகளை ஒருபோதும் ஏற்க முடியாது, எக்ஸிட் போல் முடிவுகள் பொதுவாக பொய்யாகவே அமைந்து விடுகின்றன, டெல்லியில் 4வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் அமைப்பார், டெல்லி தேர்தல் களத்தில் ஹாட்ரிக் வெற்றியை ஆம் ஆத்மி அறுவடை செய்யும்’ என்று அக்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், கடந்த 2015, 2020ல் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பான்மையானவை, ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும் என கணித்திருந்தன. அதே போல ஆம் ஆத்மியும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post எக்ஸிட் போல்; பாஜ கனவு பலிக்காது… டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் ஆட்சிதான்; ஆம் ஆத்மி நம்பிக்கை appeared first on Dinakaran.