
கூடலூர்,
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு ஓவேலி பகுதியில் உள்ள குடிநீர் திட்ட தடுப்பணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி அருகே பல்வேறு தெருக்களுக்கு செல்லும் வகையில் குடிநீர் குழாய்களின் இணைப்பு மையம் உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அப்பகுதியில் பழுது ஏற்பட்டு இருந்தது. இதனால் தினமும் குடிநீர் அதிகமாக வெளியேறி சாலையில் வீணாக வழிந்தோடியது. இதை கண்ட பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பது, குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் கடந்த மாதம் 30-ந் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து கூடலூர் நகராட்சி ஆணையாளர் ஸ்வேதாஸ்ரீ, குடிநீர் வீணாகும் இடத்தில் உள்ள குழாய்களில் பழுதை சரிசெய்யும் படி உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி குடிநீர் குழாய் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான ஊழியர்கள் கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு குடிநீர் குழாய்களை சரிசெய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது குழாய்களை இணைக்கக்கூடிய வால்வு பகுதியில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் பழுதான பகுதியில் புதிய உதிரி பாகங்களை கொண்டு சரிசெய்தனர். இதுகுறித்து குடிநீர் வினியோக ஊழியர்கள் கூறும் போது, குறிப்பிட்ட இடத்தில் பழுது சரிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் வரும் நாட்களில் தண்ணீர் வீணாக வெளியேற வாய்ப்பில்லை என்றனர். இதற்காக உரிய நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.