
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் டொனால்டு சாம்ஸ் (வயது 91). அந்நாட்டை சேர்ந்த 42 பேருடன் ஒரு குழுவாக இந்தியாவுக்கு வந்துள்ளார். சுல்தான் கஞ்ச் பகுதியில் இருந்து பீகாரின் பாட்னா நோக்கி கங்கையாற்றின் வழியே பயணித்து உள்ளார். அப்போது, உடல்நலம் குன்றி முங்கர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இந்திய அதிகாரிகளிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தூதரகம் மற்றும் டொனால்டின் மனைவி அலைஸ் சாம்ஸ் ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிறிஸ்தவரான டொனால்டின் உடலுக்கு அலைஸ் ஒப்புதலுடன் இந்தியாவில் இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இதற்காக பாதிரியார் ஒருவரை இந்திய அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இறுதியில் டொனால்டின் உடல் சுராம்பா பகுதியில் கிறிஸ்தவ முறைப்படி, அடக்கம் செய்யப்பட்டது.
அவருடைய உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்படுவதற்கு அவருடைய உயிலே அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தியாவின் மீது கொண்ட அன்பால் அவர், உடலை இந்தியாவில் அடக்கம் செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவருடைய மனைவி அலைஸ் கூறும்போது, பிரிட்டிஷ் ஆட்சியின்போது, டொனால்டின் தந்தை அசாமில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் அசாமுக்கு அவர் சென்று விடுவார். இந்த முறை அவர் இந்தியாவுக்கு மேற்கொண்டது 12-வது பயணம் ஆகும். ஒவ்வொரு முறையும் கங்கை ஆற்றின் வழியே பயணம் செய்யும் வழக்கம் கொண்டிருந்துள்ளார்.
இந்தியா மீது கொண்டிருந்த ஆழ்ந்த பிணைப்பால், அவருடைய இறுதி சடங்குகள் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என அவருடைய உயிலில் குறிப்பிட்டு உள்ளார். அவருடைய இறுதி ஆசையின்படி, இந்தியாவிலேயே டொனால்டின் உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.