18 ஆண்டுகளை நிறைவு செய்த அமீரின் "பருத்திவீரன்"

4 hours ago 1

சென்னை,

முதல் திரைப்படத்தின் மூலமே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்கள், சிலரே. அந்த வரிசையில் நடிகர் கார்த்தியும் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி இடம் பிடித்தார். இயக்குநர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து உள்படப் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்தி 'பருத்திவீரன்' ஆக மாறினார்.

மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படும் தந்தைக்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்படும் தாய்க்கும் பிறந்தவர்தான், இந்த பருத்திவீரன். பெற்றோரை இழந்து சித்தப்பா மற்றும் பாட்டியின் அரவணைப்பிலும் வாழ்ந்து வரும் பருத்திவீரனை காதல் கொள்ளும் அத்தை மகளின் காதல் கைகூடுகிறதா என்பதை எதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிய வைத்திருப்பார், இயக்குனர் அமீர்.

அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், இளையராஜாவின் குரலில் வெளிவந்த 'அறியாத வயசு..' என்ற பாடலுக்கு உருகாத ஆட்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல், யுவன் சங்கர் ராஜாவின் கிராமிய இசைக்கு இப்படம் முக்கிய விதையாக மாறி இருந்தது. மேலும் இதில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது, திரைப்படத்தை மேலும் மெருகேற்றியது.

இப்படியான திரைப்படைப்பு வெளிவந்து இன்றுடன் 18 ஆண்டுகள் முடிவடைந்தது மட்டுமல்லாமல், நடிகர் கார்த்தியின் சினிமாப் பயணமும் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்பதுதான் டாப் ஹைலைட். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், பல திரைப்பிரபலங்கள் கார்த்திக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கார்த்தி, சரவணன், கஞ்சா கருப்பு, பிரியாமணி, குட்டிச் சாக்கு, பொன்வண்ணன், சமுத்திரக்கனி என அனைவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர். இளையராஜா பாடிய அறியாத வயசு, அய்யய்யோ, ஊர் ஓரம் புளியமரம் ஆகிய பாடல்கள் இன்று வரை ரிபீட் ரகம். 

Read Entire Article