கூடலூரில் இன்று வாசனை திரவிய கண்காட்சி துவக்கம்

9 hours ago 1

*அமைச்சர்கள், எம்பி பங்கேற்பு

கூடலூர் : நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 11-வது வாசனை திரவிய கண்காட்சி இன்று (9ம் தேதி) துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. துவக்க விழா நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், எம்பி ஆ.ராசா, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கூடலூரில் மார்னிங் ஸ்டார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் 11-வது வாசனை திரவிய கண்காட்சிக்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஏலக்காய், கிராம்பு, மிளகு, பட்டை சீரகம் சோம்பு உள்ளிட்ட 100 கிலோ எடையுள்ள 13 வகையான வாசனை பொருட்களால் குன்னூர் ரயில் நிலையம், இந்திய வரைபடம், வாசனை திரவிய அலங்கார வளைவு மற்றும் வண்ணத்துப்பூச்சி செல்பி ஸ்பாட் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் 5-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒரு வார காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பழங்கள், காய்கறிகள், இயற்கை விவசாய இடுபொருட்கள் உள்ளிட்டவற்றிற்கான கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்காக மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொழுதுபோக்கு அம்சங்கள் ராட்டினம், மினி ரயில் உள்ளிட்ட பல்வேறு அரங்கு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

துவக்க நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை பொதுமக்கள் கண்டு ரசிப்பதற்காக பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி ஏற்பாடு மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் இன்று (9ம் தேதி) நடைபெறும் நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அரசு தலைமை கொறடா ராமசந்திரன், எம்பி ஆ.ராசா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கண்காட்சி நடைபெறும் மார்னிங் ஸ்டார் பள்ளி அமைந்துள்ள தேவர்சோலை சாலை பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் காவல்துறையினர், போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post கூடலூரில் இன்று வாசனை திரவிய கண்காட்சி துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article