நெல்லை, ஏப். 11: கூடங்குளம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கண்ணன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கலைச்செல்வி (54). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு தேவைக்காக 7 பவுன் தங்க நகையை அடகு வைப்பதற்காக கண்ணன்குளத்தில் இருந்து செட்டிகுளத்திற்கு பஸ்சில் புறப்பட்டு சென்றுள்ளார். நகையை ஒரு பர்சில் வைத்து அதனை மஞ்சள் பையில் சுருட்டி வைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
பஸ் செட்டிகுளம் வந்ததும் கலைச்செல்வி இறங்கும்போது தனது கையில் இருந்த பையை பார்த்துள்ளார். அப்போது பையின் அடி பகுதி பிளேடால் கிழிக்கப்பட்டு பர்சில் இருந்த 7 பவுன் நகை திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் யாரோ பையில் இருந்த நகையை திருடிச் சென்றதை அறிந்த கலைச்செல்வி, கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.4.5 லட்சம் ஆகும். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
The post கூடங்குளம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.