கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ உரை

3 days ago 3

புதுடெல்லி,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையின் நேரமில்லா நேரத்தின்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தால் தென் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு குறித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத் மாநிலத்தில் மிதி-விர்தி கிராமத்திற்கு அருகிலுள்ள பாவ்நகரில் அணுமின் நிலையத்தை நிறுவ மத்திய அரசு ஒரு திட்டம் வகுத்தது. அந்த நேரத்தில், குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தில் அனுமதி தர மறுத்தார். குஜராத் மாநிலம் இந்திய பிரதமருக்கு சொந்த மாநிலம். எனவே, அவர் குஜராத்தில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

நவம்பர் 22, 1988 அன்று, அப்போதைய சோவியத் ஒன்றிய அதிபர் கோர்பச்சேவ் இந்தியாவிற்கு வருகை தந்துபோது, அப்போதைய இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கை வெளியிட்டு உரையாற்றினார். அதில், இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் இணைந்து, இந்தியாவில் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறினார். மக்களவையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டபோது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ராஜ்யசபாவிலும் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இந்திய பிரதமரிடம் இது குறித்து விளக்கம் கேட்ட ஒரே ஒரு உறுப்பினர் நான்தான். அணுமின் நிலையம் அமைக்க நீங்கள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. ஆனால் தென் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியான கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் என்று கூறினேன். இதுபற்றி அறிந்ததும் கூடங்குளம் பகுதி பொதுமக்களும், மீனவர்களும் கிளர்ந்தெழுந்தனர்.

அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் உள்ள அணு உலையிலும், சோவியத் ரஷ்யாவின் செர்னோபிலிலும் அணு உலை பேரழிவுகள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜப்பான் புகுஷிமாவில், மார்ச் 11, 2011 அன்று, அணு பேரழிவு ஏற்பட்டு பலர் இறந்தனர். அணுக் கதிர் பாதிப்பால் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள். இந்த உண்மைகளை எல்லாம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால், தென் தமிழ்நாடு முற்றிலுமாக அழிக்கப்படும்.

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மீனவ பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் 18 மாதங்கள் போராடினர். நானும் மூன்று முறை அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டேன். போராட்டம் நடத்திய மக்கள் மீது அப்போதைய மாநில அரசால் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.

கூடங்குளத்தில் ஏற்கனவே நான்கு அணு உலை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு அலகுகள் அமைக்க முடிவுசெய்துள்ளனர். மேலும் முழுப் பகுதியும் அணு நரகமாக மாறி வருகிறது.

பேரழிவு ஏற்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். கற்பனை செய்ய முடியாத அளவு மரணங்கள் நடக்கும்.

இப்போது எழும் முக்கியமான மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால், அவர்கள் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக எங்கே அப்புறப்படுத்தப் போகிறார்கள்? இப்போது அணுக் கழிவுகள் ஆலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அணுக் கழிவுகளை கடலில் கொட்டப் போகிறார்கள் என்று நான் அச்சப்படுகின்றேன். ஒரு எரிமலை எங்கள் தலையில் அமர்ந்திருக்கிறது. இதை எதிர்த்துப் போராடும் பூவுலக நண்பர்கள் அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தது. அதில், அணுமின் நிலையம் 2018-ம் ஆண்டுக்குள் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (DGR) அமைக்க வேண்டும் என்று கூறியது.

அது அமைக்கப்படாததால், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. சுப்ரீம் கோர்ட்டானது DGR கட்டுவதற்கு ஏப்ரல் 2022 வரை காலகெடு வழங்கியது. ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது. இந்த அணுக் கழிவுகளை அணு உலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப்போவதில்லை. அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் தென் தமிழக மக்களின் கோரிக்கையாகும். அணுமின் நிலையத்தை மூடவும், வரவிருக்கும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசையும், பிரதமரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article