குவைத்தில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய ரூ.35 லட்சம், 48 பவுன் நகையை தராமல் மனைவி 2வது திருமணம்

18 hours ago 2

*மீட்டுத்தரும்படி எஸ்பி ஆபிசில் கணவர் மனு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கணவரின் வீட்டிலிருந்து ரூ.35 லட்சம் பணம் மற்றும் 48 பவுன் நகைகளை எடுத்துச்சென்று, இரண்டாவது திருமணம் செய்த மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி, எஸ்பி ஆபீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஐகுந்தம் கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தில்பாஷா(36). இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நான் குவைத் நாட்டில் 2009 முதல் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தேன். அங்கு பணிபுரிந்தபோது, உறவினரின் மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறி, நான் சம்பாதிக்கும் பணத்தை அவர்களுக்கு அனுப்பினால், அதில், நகை, பிளாட் வாங்கி வைப்பதாக கூறினர்.

அதனை நம்பி மாமியார், மாமனார், மைத்துனரின் வங்கி கணக்கில் 2009 முதல் 2020 வரை ரூ.40 லட்சம் வரை அனுப்பினேன். இதற்கிடையே 2010ல் கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டது. அப்போது என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர்.

ஆனால், நான் அப்போது திருமணம் செய்ய மறுத்ததால், அப்பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதை கேள்விப்பட்டு நான் அனுப்பிய பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டதால், அந்த திருமணத்தை நிறுத்தி, 22.4.2019ல் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின்போது, நான் அவர்களது வங்கி கணக்கில் போட்ட பணத்தின் மூலம் வாங்கிய 48 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி நகையை பெண்ணுக்கு போட்டனர்.

திருமணம் முடிந்த மறுநாள் எனது வீட்டிற்கு வந்த உறவினர்கள் நகைகள் அனைத்தையும் வாங்கிச் சென்றுவிட்டனர். திருமணம் முடிந்த நிலையில், மனைவி கர்ப்பமானார். மருத்துவ பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு, நான் குவைத் சென்றுவிட்டேன். 3 மாதத்திற்கு பின் கரு கலைந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, குவைத்திலிருந்து மீண்டும் வந்தேன். அதன்பிறகு மனைவி மீண்டும் 2 முறை கர்ப்பமான நிலையில், எனக்கு தெரியாமல் கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரை சாப்பிட்டு குழந்தையை அபார்ஷன் செய்துவிட்டார்.

அதன்பின்னர் நான் அனுப்பிய பணத்தில் வாங்கிய நகை, பணத்தை திரும்ப கேட்டதால், நகை, பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டதாகவும், மனைவிக்கு என்னுடன் வாழ விருப்பமில்லை எனக்கூறி, பணம், நகை முழுவதையும் ஏமாற்றிவிட்டனர்.

இதனால், நான் 2023ல் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கு நீதிமன்றத்தில் இருக்குபோதே மனைவிக்கு 2வது திருமணம் செய்து வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், திருமணம் செய்து கொண்ட மனைவி மீதும், எனது பணம், நகையை ஏமாற்றிய உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து ரூ.35 லட்சம் பணம் மற்றும் 48 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி, எனது ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பர்கூர் போலீசுக்கு விசாரணை நடத்த மனுவை அனுப்பியுள்ளனர்.

The post குவைத்தில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய ரூ.35 லட்சம், 48 பவுன் நகையை தராமல் மனைவி 2வது திருமணம் appeared first on Dinakaran.

Read Entire Article