குழியடிச்சான்

1 month ago 8

இன்றைய நவீன வேளாண்மையில் கால்நடைகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது. கால் நடைகளின் சிறுநீர் மற்றும் சாணம் மண் வளத்தைக் காப்பாற்றின. ஆனால் தற்போது எல்லோரும் டிராக்டருக்கு மாறியதால், மண்ணின் இயல்பும் மாறிவிட்டது. கடுமையான வறட்சி மற்றும் மோசமான நிலம் இருந்தாலும், பாரம்பரிய நெல் ரகங்கள் சிறப்பாக வளர்கின்றன. அவற்றில் ஒன்றுதான் “குழியடிச்சான்” எனப்படும் பாரம்பரிய நெல்வகை. மழைநீர், ஆற்று நீர், கிணற்று நீர், ஆழ்துளைக் கிணறு நீர் என எதுவும் இல்லாமல் போனாலும் “குழியடிச்சான்” வளர்ந்துவிடும். குழியடிச்சான் உப்பு நிலத்திலும் நன்றாக வளரும். இது கடலோரப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மானாவாரி நிலங்கள் மற்றும் பாசன நிலங்களில் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது.குழியடிச்சான் நெல்லை ஐப்பசி மாதத்தில் நேரடியாக விதைக்கலாம். ஒரே மழை பெய்தால் விதை நெல் முளைத்துவிடும். பிறகு குறைந்த நீர்வரவு அல்லது ஈரப்பதம் இருந்தாலும், குழியில் உள்ள நீரைக் கொண்டு தானாகவே வளரும். இதனால், இதற்கு “குழியடிச்சான்” அல்லது “குளிகுளிச்சான்” என்ற பெயர் வந்தது. குழியடிச்சான் நெல் மிக குறைந்த நாளிலேயே அறுவடைக்கு வந்துவிடும். குழியடிச்சான் நெல் நூறு நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். ஐப்பசியில் விதைத்தால், தை மாதம் இறுதிக்குள் அறுவடைக்குத் தயாராகும். பொன் நிறமான நெல்லுக்குள், சிவப்பான, நன்கு தடித்த மோட்ட ரக அரிசியாக இருக்கும். அரிசி அழகாக முட்டை வடிவத்தில் இருக்கும்.

குழியடிச்சான் நெல்லை ஒற்றை நாற்று முறையிலும் பயிரிடலாம். விதை நெல் தூவி சாகுபடி செய்தாலும், நாற்று மூலம் சாகுபடி செய்தாலும் அதற்கு முன்பு விதைநேர்த்தி செய்ய வேண்டும். இதனால் பூச்சிகளின் தாக்கம் ஏற்படாது, பயிரும் ஆரோக்கியமாக வளரும். நாற்றங்கால் அமைத்து விதை நெல்லை முளைக்கச் செய்த பின், நடவு வயலிலும் நடலாம். நாற்றங்கால் அமைக்கும்போதே, நடவு வயலையும் தயாராக்குவது சிறந்தது. முறையான பயிர் பராமரிப்பு முறைகளைச் செய்து காவாலை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி நிலத்தை வளமாக்கி, காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சினால் பயிர் சிறப்பாக விளையும். ஏக்கருக்குக் குறைந்தது இருபது மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். சாயும் தன்மை இதற்கு கிடையாது. குழியடிச்சான் அரிசிக்கு ஆர்கானிக் சந்தைகளில் நல்ல மதிப்பு உண்டு என்பதால், விவசாயிகள் இதை நம்பிப் பயிரிடலாம்.குழியடிச்சான் சிவப்பு அரிசி வகையைச் சேர்ந்தது. சிவப்பு அரிசி மிகவும் சிறப்பானது. இதில், மற்ற அரிசிகளைவிடச் சத்துக்களைச் செம்மையாக்கும் அளவிலான நுண்ணுயிரியல் சத்துக்கள் உள்ளன. உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கிறது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ரத்தசோகை பிரச்னைகள் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. வளரும் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்றது. செரிமானத்தைச் சிறப்பாக்கும். நாட்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள், குழியடிச்சான் அரிசியில் கஞ்சி வைத்துக் குடிக்க உடல் நன்கு தேறும். இத்தகைய சிறப்பு மிக்க குழியடிச்சான் ரக நெல்லை விவசாயிகள் பயிரிட்டு பயனடையலாம்.

பனை விதை!

தமிழர்களின் தேசிய மரமான பனைமரம் சுற்றுச்சூழலுக்கு பல்வேறு வகையில் உதவிபுரிகிறது. நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு, மண் அரிப்புத் தடுப்பு என பனையின் சேவையை அடுக்கிக் கொண்டே போகலாம். இதனால்தான் வள்ளுவப் பெருந்தகை தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார் என கூறி வைத்திருக்கிறார். பனையின் உதவி நமக்கு பேருதவி என்பதைத்தான் அதில் குறிப்பிட்டு சென்றிருக்கிறார். இத்தகைய நன்மைகள் மிகுந்த பனை மரங்களை பொது இடங்களில் வளர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் தன்னார்வலர்களும் பனையைப் பெருக்குவதில் ஆத்மார்த்தமாக சேவை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பூரணங்குப்பம் ஆனந்தன் என்பவர் தொடர்ச்சியாக பனை விதை ஊன்றுதல், அதை வளர்த்து பராமரித்தல் போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தவளக்குப்பம் அருகே உள்ள இடையர்பாளையம் என்ஆர் நகரில் அரசு சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சங்கராபரணி ஆற்று வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்பணை கட்டப்பட்டது. அந்தத் தடுப்பணையை மேலும் வலுப்படுத்தி, மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் பூரணாங்குப்பம் ஆனந்தன் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து 1500 பனைவிதைகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

The post குழியடிச்சான் appeared first on Dinakaran.

Read Entire Article