குழிப்பாந்தண்டலம் ஏரிக்கரையை பலப்படுத்த பனை மரங்கள் தீ வைத்து எரிப்பு: நிலத்தடி நீர் பாதாளத்திற்கு போகும் அபாயம்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை

4 hours ago 3

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் பனை மரங்களை தீ வைத்து எரித்து, ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் பாதாளத்திற்கு போகும் நிலை உள்ளதால், பனை மரங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் தாலுகா முற்றிலும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு, விவசாய மக்களின் ஒரு அங்கமாக மரங்கள் வளர்ப்பு முக்கியமானதாக உள்ளது. தாலுகா முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் வரப்பைச் சுற்றிலும் பனை மரங்களை வளர்த்து வந்தனர். மேலும், விவசாய நிலத்தில் கிணறு அமைந்துள்ள இடத்தில் தவிர்க்க முடியாத மரமாக இந்த பனை மரங்கள் இருந்து வந்தது.

பனை மரங்கள் வளர்ந்த இடங்களில் நிலத்தடிநீர் ஊற்று அதிகமாகவும், வற்றாத நீரையும் கொடுத்துள்ளது பல ஆய்வுகள் மூலம் நமக்கு தெரிய வந்த உண்மையாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த பனை மரங்களை சிலர் செங்கல் சூளைகளுக்கு எரிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். அதற்காக, செங்கல் சூளை என்ற பெயரில் செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக பனை மரங்களை வெட்டி கண்மூடித் தனமாக அழித்து வருகின்றனர். பனை மரங்கள் மனிதர்களுக்கு தரும் நன்மைகளை அறிந்து தமிழ்நாடு அரசு மாநில மரமாக அங்கீகரித்துள்ளது. ஆனால், பனை மரங்களை வெட்டி அழித்து வருவதும், தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் வேடிக்கை பார்ப்பது தொடர் கதையாக உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் விவசாய நிலங்களை வீட்டு மனை பிரிவுகளாக மாற்றி, 50 சதவீத பனைமரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனியும், பனை மரங்களை வெட்டி அழிக்க அனுமதித்தால், இனிவரும் சந்ததிகளுக்கு பனை மரங்களை ஓவியம் மூலமாக மட்டுமே காண்பிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட குழிப்பாந்தண்டலம், ஆண்டிகுப்பம், குச்சிக்காடு, நந்திமா நகர், எடையூர், கொய்யாதோப்பு உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களின், பிரதான தொழில் விவசாய தொழில் ஆகும். இதில், 90 சதவீதம் பேர் விவசாய பணியில் ஈடுபடுகின்றனர்.

இங்கு, பெரிய மற்றும் சித்தேரி என 2 ஏரிகள் உள்ளன. மழைக்காலங்களில் ஏரியில் முழுவதும் தண்ணீர் தேங்கி ரம்மியான தோற்றத்தில் காட்சியளிக்கும். இந்த தண்ணீரை, நெல், நிலக்கடலை, கேழ்வரகு, தர்பூசணி உள்ளிட்ட பயிர்களுக்கு பயன்படுத்தி வந்தனர். பெரிய ஏரி மற்றும் சித்தேரி கரை மீதும், கரையின் ஓரத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட பனை மரங்கள் சுமார் 70 அடி முதல் 100 அடி வரை வளர்ந்து பசுமையாக காணப்பட்டது. இந்நிலையில், சித்தேரி கரையை பலப்படுத்தும் என்ற பெயரில், கரையையொட்டி இருந்த 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மற்றும் பனை கன்றுகளை தீ வைத்து எரித்து கரையை பலபடுத்தும் பணி நடக்கிறது. இந்த, பணியை குழிப்பாந்தண்டலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறதா? ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம் செய்யப்படுகிறதா? அல்லது பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறை மூலம் செய்யப்படுகிறதா? என வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் தெரியாமல் குழம்புகின்றனர்.

பனை மரங்கள் வெட்டி அழிப்பதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாதது போல் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பனை மரங்களை தீ வைத்து எரிப்பதால், நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு போகும் அபாய நிலை உள்ளது. பனை மரங்களை வெட்டி அழிப்பதை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளை கண்டித்து இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, மாவட்டம் முழுவதும் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து, வருவாய்த்துறை மூலம் கண்காணிக்க வேண்டும். இடையூறு மற்றும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் உரிய அனுமதி பெற்று பனை மரங்களை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன் வந்து விதிமுறைகளை உருவாக்கிட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘குழிப்பாந்தண்டலம் சித்தேரி ஏரிக்கரையையொட்டி 500க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மற்றும் மரக்கன்றுகள் உள்ளன. கடந்த, ஒரு வாரத்திற்கு முன்பு ஏரிக்கரையை பலப்படுத்துதல் என்ற பெயரில் கரையில் இருந்த 100க்கும் மேற்பட்ட மரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மரங்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே மரங்களை வெட்டி அகற்றுபவர்களுக்கு துணை போவது வேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. மேலும், பல பகுதிகளில் பனை மரங்கள் தனிப்பட்ட நபர்களின் லாப நோக்கத்துக்காக வெட்டப்பட்டு வந்தன. தற்போது, கிராமங்களில் சாலை விரிவாக்கப்பணி என சொல்லிவிட்டு பனை மரங்கள் அதிக அளவில் வெட்டி வீழ்த்தபட்டு வருவது மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பனை மரத்தை வெட்டிய குற்றத்துக்காக தமிழ்நாட்டில் முதல் முறையாக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே, குழிப்பாந்தண்டலம் சித்தேரி ஏரியை பலப்படுத்தும் என்ற பெயரில், 100க்கும் மேற்பட்ட பனை மரங்களை தீ வைத்து எரித்தவர்கள் மீதும், கண்டும் காணாதது போல் மெத்தனமாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுத்து, நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்’ என்றனர்.

ரியல் எஸ்டேட் தொழிலுக்காக…
செங்கல்பட்டு மாவட்டத்தில், சமீப காலமாக விவசாய நிலங்கள் வீட்டு மனை பிரிவுகளாக மாற்றி, பிளாட் போட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, யாரிடமும் அனுமதி பெறாமல் பனை மரங்கள் வேரோடு பிடுங்கியும், அடியோடு வெட்டியும் அகற்றப்பட்டு வருகிறது. பல்வேறு வகையில் பயன்தரக்கூடிய பனை மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை தடை விதிக்க வேண்டும். மரங்களை வெட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால், மட்டுமே பனை மரங்களை பாதுகாக்க முடியும்.

வருவாய்த்துறை கண்காணிக்குமா?
பனை மரங்கள் பாதுகாப்பு குறித்தும், பனை மரங்கள் வெட்டுவதை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையை சேர்ந்த விஏஓ, வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை
பனை மரங்களை அனுமதி இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலையோரம் மற்றும் விற்பனை மனைகளில் உள்ள மரங்கள் உரிய அனுமதி பெறாமல், வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகைப்பட ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் கூட, கண்டும் காணாதது போல் மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post குழிப்பாந்தண்டலம் ஏரிக்கரையை பலப்படுத்த பனை மரங்கள் தீ வைத்து எரிப்பு: நிலத்தடி நீர் பாதாளத்திற்கு போகும் அபாயம்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை appeared first on Dinakaran.

Read Entire Article