குழி தோண்டி சிறுக சிறுக சேமித்த ரூ.1 லட்சத்தை கரைத்த கரையான்: கண்ணீர் விட்டு கதறும் கூலித்தொழிலாளி

3 hours ago 3

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கிளாதிரி கக்கனம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் (35). மனைவி முத்துக்கருப்பி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஓலை வேய்ந்த கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் கூலி வேலைக்கு சென்று கிடைத்த பணத்தை, குடும்ப செலவுகள் செய்தது போக சிறுக சிறுக சேமித்து வைத்துள்ளனர். அந்த பணத்தை ரூ.500 நோட்டுகளாக மாற்றி ஒரு தகர உண்டியலில் வைத்து வீட்டினுள் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர்.

குழந்தைகளின் காதணி விழாவிற்காக சேமித்த பணத்தை, சில மாதங்களுக்கு முன்பு உண்டியலை தோண்டி எடுத்து எண்ணினர். அப்போது ஒரு லட்ச ரூபாய் வரை இருந்ததால், மேலும் சேமிக்க வேண்டும் என நினைத்து, மீண்டும் மண்ணுக்குள் புதைத்து வைத்தனர். நேற்று காலை தகர உண்டியலை தோண்டி எடுத்துள்ளனர். அப்போது சமீபத்தில் பெய்த மழையால் தகரத்தை கரையான் அரித்து உள்ளே இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் வீணாகி இருப்பது தெரிந்தது.

ரூபாய் நோட்டுகளை கரையான் அரித்ததை பார்த்த குடும்பமே கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளது. வங்கியில் கரையான் அரித்த பணத்தை மாற்றலாம் என கூறியதை அடுத்து, வங்கிக்கு சென்றுள்ளனர். வங்கி அதிகாரிகள் கிழிந்த நோட்டுகளை தான் மாற்ற முடியும். கரையான் அரித்த நோட்டுகளை மாற்ற முடியாது என கூறியதால், குடும்பமே சோகத்தில் மூழ்கி கிடக்கின்றனர். சிவகங்கை வருவாய்த்துறை அலுவலர்கள் தகவல் அறிந்து வந்து பணத்தை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறியுள்ளனர்.

The post குழி தோண்டி சிறுக சிறுக சேமித்த ரூ.1 லட்சத்தை கரைத்த கரையான்: கண்ணீர் விட்டு கதறும் கூலித்தொழிலாளி appeared first on Dinakaran.

Read Entire Article