நன்றி குங்குமம் தோழி
தொட்டதுக்கெல்லாம் சிணுங்கும் குழந்தைகளை சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. சிரிப்பு மற்றும் அழுகை மூலம் மட்டுமே தங்களின் உணர்வுகளை இவர்கள் வெளிப்படுத்துவார்கள். இதனை கருதி குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வு, வெறுப்பு, பொறாமை, சலிப்பு, ஏமாற்றம், குழப்பம் போன்ற உணர்வுகளையும் முடிந்தவரை வார்த்தைகளால் வெளிப்படுத்த கற்றுக்கொடுக்கிறது ‘தொட்டாச்சிணுங்கி இளவரசி’ புத்தகம். இதுகுறித்து விளக்குகிறார் புத்தக ஆசிரியர் மற்றும் எம்மொழி வெளியீடு நிறுவனர் நிவேதிதா.
“தொட்டாச்சிணுங்கி இளவரசி புத்தகம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. என் மகனின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்ததின் விளைவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். குழந்தைகளால் எல்லா நேரங்களிலும் அவர்களின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடிவதில்லை. என்னாச்சு என்று கேட்டாலே உதட்டை பிதுக்கிக் கொண்டு அழுதுவிடுவார்கள்.
எதற்காக அழுகிறார்கள் என்று புரியாமல் பெற்றோர்களும் சிரமப்படுகின்றனர். தன்னுடைய உணர்வினை குழந்தை முகபாவனை அல்லது தங்களுக்கு சொல்லத் தெரிந்த வார்த்தைகளால் வெளிப்படுத்தினால் பெற்றோரும் புரிந்து கொண்டு அவர்களை சமாதானப்படுத்த முடியும். தங்களுக்கு ஏற்படும் பலவிதமான உணர்வுகளை புரியாமல் உடனே அழுதுவிடுவார்கள். சிரிப்பு, அழுகை போலவே மற்ற சவாலான உணர்வுகளையும் குழந்தைகள் வெளிப்படுத்த கற்றுக்கொள்வது நல்லது.
உதாரணமாக “அம்மா எனக்கு கோவம் வருது, நான் சோர்வாக இருக்கேன்” என்பதை வார்த்தைகளாக வெளிப்படுத்த அவர்களை பழக்கலாம். குழந்தைக்கு பொறாமை உணர்வு ஏற்பட்டால் அதை குற்றமாக கருதாமல் அந்த உணர்வுகளை கடந்து போக கற்றுக்கொடுக்க வேண்டும். இவையெல்லாம் பெற்றோர்களுக்கு புரிந்தால்தான் குழந்தைகளுக்கு சொல்லித்தர முடியும். மேலும் குழந்தைகள் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் புரியும். எனவே இந்தப் புத்தகம் பெற்றோர்களுக்கும்தான்” என்றவர் தன் புத்தக வெளியீடுகளை பற்றி பகிர்கிறார்.
“எனக்கு குழந்தை பிறந்து, குழந்தை வளர்ப்பில் நான் கவனம் செலுத்தும் போது நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அதில் ஒன்றுதான் ஆரம்பகால கற்றல். என் மகன் 6 மாதக்கால குழந்தையாக இருக்கும் போது அவனுக்காக பலகை புத்தகங்களை (board books) தேடி வாங்கினேன். அவை எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்தன. தமிழ் புத்தகங்கள் அதிகமாக இல்லை. என் மகனுக்கு குழந்தைப்பருவத்திலிருந்தே தமிழை சொல்லிக்கொடுக்க விரும்பினேன். என்னைப்போல் பல பெற்றோர்கள் தமிழ் மொழியில் புத்தகங்களை தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அதனால் நானே குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிட திட்டமிட்டேன். ‘எம்மொழி’ பெயரில் பதிப்பகம் தொடங்கினேன்.
பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொடுப்பதோடு தமிழ் வழியில் நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டுமென புத்தகங்களை வடிவமைத்தேன். ஏற்கனவே சந்தையில் உள்ள தமிழ் புத்தகங்கள் போல் இல்லாமல் மாறுபட்டு இருக்க வேண்டும் என்பதால் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் புத்தகங்களில் கொண்டுவந்தேன். என் புத்தகங்கள் படைப்பாற்றலுடன் இருப்பதால், குழந்தைகள் புத்தகங்களோடு உரையாடும் வகையில் அதனை அமைத்திருக்கிறேன். இதன் மூலம் புத்தக வாசிப்பில் சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்.
‘சுட்டிக் கோலங்கள்’, புத்தகத்தில் குழந்தைகள் கோலங்களை வரைந்து பழகவும் அதன் நன்மைகளை பெறவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது பெரியவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். தமிழ் உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்களை அப்படியே கொடுக்காமல் அந்த எழுத்துக்களின் உச்சரிப்பு அடங்கிய வார்த்தைகளை படங்களுடன் கொடுத்திருக்கிறேன். இறை வணக்கத்திற்கான ஸ்லோகங்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில்தான் இருக்கும்.
அதனால் தமிழில் உள்ள இறை வணக்கம் பாடல்களை புத்தகமாக வெளியிட்டேன். அதில் பாடல்களை ஒலி வடிவமா கேட்டுக்கொண்டே ஸ்லோகங்களை சொல்லி பழகலாம். வெளிநாட்டில் வசிக்கும் பெரியவர்களும் தமிழை எளிமையா கற்றுக்கொள்ள இது உதவுகிறது. மூன்று எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளை இணைக்கும் புதிர் விளையாட்டு மூலமாக தமிழ் வார்த்தைகளை கற்றுக் ெகாள்ளலாம். மேலும் ஆக்கப்பூர்வமான புத்தகங்கள் மூலம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொடுக்கும் வழிகளையும் ஆராய்ந்து வருகிறேன்’’ என்றவர் குழந்தைகளின் புத்தக வாசிப்பின் பலன்களை பகிர்ந்தார்.
“குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்திலேயே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது நல்லது. மொபைல் திரைகளில் செலவிடும் நேரம் குறையும். அதே சமயம் குழந்தைகளை புத்தகம் வாசிக்க கட்டாயப்படுத்தவும் கூடாது. குழந்தைகள் வாசிக்கும் புத்தகம் கண்கவர் வண்ணங்களிலும் கவனத்தை ஈர்க்கும்படி இருந்தால் அவர்களே ஆர்வத்துடன் புத்தகங்களை கையில் எடுப்பார்கள். எங்களின் புத்தகங்களின் சிறப்பே அதிலுள்ள விளக்கப்படங்கள் கதைகளுடன் பொருத்தி பார்ப்பதாக இருப்பதுதான்.
இதற்காக சிறந்த ஓவியக் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என்னுடன் இணைந்து பங்காற்றுகிறார்கள். தமிழ் மொழியில் புத்தகங்கள் இருப்பதால் தாத்தா, பாட்டிகளால் தங்களின் பேரக்
குழந்தைகளுக்கு புத்தகம் வைத்து கதைகள் சொல்ல முடிகிறது. இதன் மூலம் குழந்தைகள் பல வழிகளில் தமிழை பழகலாம். என்னுடைய புத்தகம் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதற்கான ஒரு வழிதான். அதே சமயம் பெற்றோர்களும் வீட்டில் குறைந்தது 30 நிமிடங்களாவது குழந்தைகளுடன் தமிழ் மொழியில் பேசலாம்” என்றார் நிவேதிதா.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post குழந்தைகளுடன் தமிழில் பேசுங்கள்! appeared first on Dinakaran.