பெரம்பூர்: சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (55). இவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஷாலினி (52). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 3ம்தேதி, தம்பதி வீட்டில் இருந்தபோது ஒருவர் வந்து, ‘‘நான் ஜோசியம் பார்ப்பேன். உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் பார்த்து சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபரை ரவிச்சந்திரன் வீட்டுக்குள் அழைத்துச்சென்று ஜோசியம் பார்க்க வைத்துள்ளார். அப்போது அந்தந நபர், ‘’உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டுமென்றால் சிறப்பு பூஜை செய்ய வேண்டும். அதற்கு 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படும்’’ என்று கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன், ‘’இப்போது அவ்வளவு பணம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த நபர், ‘’வீட்டில் நகைகள் இருந்தால் கொடுங்கள் என கேட்டபோது ரவிச்சந்திரனும் ஐந்து சவரன் செயினை எடுத்து கொடுத்துள்ளார். இதன்பிறகு சமையல் அறையில் இருந்து புளியை எடுத்து கரைத்து ஒரு சொம்பில் போட்டு அதனுள் செயினை போட்டு மூடியுள்ளார். இதன்பிறகு அந்த நபர், ‘’மாலை 6 மணிக்கு செயினை எடுத்து பாருங்கள்’’ என கூறிவிட்டு சென்றுவிட்டார். இதன்படி, மாலை 6 மணிக்கு மேல் தம்பதி பார்த்தபோது செயின் இல்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தனர். இதுசம்பந்தமாக கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உதவி கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி, கொளத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் கீழ்க்கரை கிராமத்தை சேர்ந்த சூர்யா என்கின்ற மைதீன் (43) என்பவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இவரிடம் இருந்து தம்பதியிடம் ஏமாற்றிய ஐந்து சவரன் செயினை மீட்டனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 6ம் தேதி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல்போலு தெருவில் வசித்துவரும் சித்ரா (38) வீட்டில் சிறப்பு பூஜை செய்வதாக 5 சவரன் செயினை பறித்துள்ளார். ஒரு திருட்டில் ஈடுபட்டால் உடனடியாக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு பின்னர் சிறிதுகாலம் கழித்து மீண்டும் வந்து கைவரிசை காட்டுவாராம். இவர் பட்டினம்பாக்கம் பகுதியில் இதுபோன்று கொள்ளையடித்துள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post குழந்தை பாக்கியம் கிடைக்க செய்வதாக தம்பதியிடம் 5 பவுன் நகை பறித்த போலி ஜோசியர் அதிரடி கைது: பல வீட்டில் சித்துவேலையை அரங்கேற்றியது அம்பலம் appeared first on Dinakaran.