கடலூர், பிப். 28: திருமணமான சில நாட்களிலேயே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த அண்ணன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பி அலுவலகத்தில் தம்பி புகார் மனு அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சூர்யா(27) என்பவர் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது அண்ணன் கலையரசனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் விஷம் குடித்துவிட்டார். அப்போது நாங்கள் இதுகுறித்து பெண் வீட்டாரிடம் கேட்டபோது, குடும்ப பிரச்னையால் விஷம் குடித்ததாக கூறினர். இதையடுத்து திருமணம் முடிந்து அன்று இரவு அந்த பெண் எனது அண்ணனிடம் வேறு ஒருவரை தான் விரும்புவதாக கூறியுள்ளார். இதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி எனது அண்ணனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அப்போது பெண் வீட்டார், எனது அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்து, எனது அண்ணனின் மனைவியை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் எனது அண்ணன் பிப்ரவரி 20ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது எனது அண்ணனின் மனைவி அவருக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளார். இதை குடித்த என் அண்ணன், சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வந்த புதுச்சத்திரம் போலீசார், எனது அண்ணனிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். இதே போல சிதம்பரம் நீதிமன்றத்தில் இருந்து வந்த நீதிபதியும் வாக்குமூலம் வாங்கியுள்ளார். ஆனால் இதுநாள் வரை எனது அண்ணனின் மனைவியையும், அவருடன் சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்யவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த அண்ணன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் தம்பி புகார் மனு appeared first on Dinakaran.