குளிர்பானத்தில் மயக்க மருந்து; மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் - சக மாணவர்கள் கைது

6 hours ago 1

மும்பை,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண், மராட்டிய மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந்தேதி தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இருவருடன் இரவு 10 மணியளவில் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார்.

திரையரங்கிற்கு செல்வதற்கு முன்பாக அந்த மாணவர்கள் இருவரும் மாணவியை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவர்களின் மற்றொரு ஆண் நண்பர் ஒருவர் வந்துள்ளார். மூவரும் சேர்ந்து மது அருந்திய நிலையில், மாணவிக்கு குளிர்பானம் ஒன்றை அவர்கள் கொடுத்துள்ளனர். அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்ததாக கூறப்படுகிறது.

அதை குடித்ததும் மாணவி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த எழுந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்து அழத் தொடங்கியுள்ளார். அவரிடம் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி மூவரும் மிரட்டியுள்ளனர்.

ஒருவழியாக அங்கிருந்து தப்பி வந்த மாணவி, இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி 2 மாணவர்கள் மற்றும் அவர்களின் நண்பர் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ், கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article