
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை பொழிச்சலூரில் 13 வயது சிறுமி ஒருவர் 12 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் கொடூர சம்பவம் மனதை உலுக்குகிறது. மேலும் குற்றவாளிகளில் 7 பேர் சிறுவர்கள் என்பது வேதனை அளிக்கிறது. குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது, ஏதோ இன்பச் சுற்றுலா செல்வது போன்று சிரித்தபடியே கையசைத்துச் சென்றுள்ளனர் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
கைது செய்யும் வேளையிலும், சிறிது கூட பயமோ, கவலையோ இன்றி இருப்பதைப் பார்த்தால், அந்த இளைஞர்கள் ஏதும் போதைப் பொருளின் தாக்கத்தில் குற்றங்களை புரிந்துள்ளனரோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 2023 உடன் ஒப்பிடுகையில் 2024-ல் போக்சோ குற்றங்கள் 52 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், தொடர்ந்து குற்றவாளிகள் எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாமல் உலவுவது தமிழக சட்டம் ஒழுங்கின் சீரழிந்த நிலையைப் பிரதிபலிக்கிறது.
இதே மனநிலை மேலும் தொடர்ந்தால், காவல்துறை, நீதிமன்றம் மீதான பயம் தளர்ந்து, குற்றங்கள் பெருகி, ஒட்டுமொத்த தமிழகமும் அழிவுப் பாதையில் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இனியும் சட்டம் ஒழுங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் சரி செய்வார் என எதிர்பார்ப்பது, சாய்ந்த மரத்தை புயலே அப்புறப்படுத்தும் என்று நம்புவது போல் ஆகும். எனவே, ஆட்சி மாற்றம் ஒன்றே, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு சட்டம் மீதான பயத்தை ஏற்படுத்தி, மீண்டும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.