குலசை தசரா: சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

3 months ago 22

குலசேகரன்பட்டினம்,

கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த நிலையில், 6-ம் திருநாளான நேற்று முத்தாரம்மன் கோவில் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு, யாகசாலை ஹோமம் பூஜையுடன் கும்ப கலசங்களில் இருந்து அம்மனுக்கு பால், மஞ்சள், விபூதி, தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இரவு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Read Entire Article