
ஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இவ்விரு அணிகள் கடந்த 8-ந்தேதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் ஸ்டேடியத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டம்தான் தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது.
முன்னதாக பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 17 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. தற்போது புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள பஞ்சாப் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேற முடியும் என்பதால் வெற்றி பெற பஞ்சாப் கடுமையாக போராடும் என்று தெரிகிறது. மறுபுறம் சீசனை வெற்றியுடன் நிறைவு செய்ய டெல்லி அணியும் மல்லுக்கட்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது.