
நீலகிரி,
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாட்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த சூழலில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் பாரஸ்ட், தொட்டபெட்டா மலைச் சிகரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நாளை (மே 25) ஒருநாள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்கள் மலையேற்ற சவாரியும் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "456 முகாம்களில் மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்கள் போதுமான அளவில் உள்ளது. பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகே நிற்கவோ, அபாயகரமான பகுதிக்கு செல்லவோ வேண்டாம். மரங்களுக்கு கீழ் நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ கூடாது. 2 நாட்கள் படகு சவாரி சேவையும், 3 நாட்கள் மலையேற்ற சவாரியும் நிறுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
அவசரக் கட்டுப்பாட்டு மையம்
1077 என்ற எண்ணிலும் 94987-94987, 0423 2450034, 0423 2450035 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.