*ஆறுமுகநேரி போலீசார் அறிவுரை
ஆறுமுகநேரி : காயல்பட்டினம், ஆறுமுகநேரி பகுதிகளில் ரோந்து பணியின் போது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அறிவுரை வழங்கினர்.
ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சிறார்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் ஆறுமுகநேரி போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியை அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகநேரி காமராஜபுரம், பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.ஐ. வாசுதேவன் தலைமையில் தலைமை காவலர் ரவிக்குமார். காவலர்கள் முத்துக்குமார். சண்முகம் ஆகியோர் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது காமராஜபுரத்தில் உள்ள வாலிபால் மைதானம் அருகே இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கும்பலாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் கூட்டம் கலைந்து ஒரு சிலர் ஓட்டம் பிடித்தனர். உடனடியாக எஸ்ஐ வாசுதேவன் அனைவரையும் அழைத்து விசாரித்தார். பின்னர் விளையாட்டும் கல்வியும் மட்டுமே ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் மனிதர்களின் உயர்வுக்கும் வழிவகுக்கும்.
எனவே தேவை இல்லாமல் தெருக்களில் கும்பலாக அமர்வது மற்றும் சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கும்பலாக செயல்படுவதாலும் கும்பலாக இருந்து செல்போனில் அதிக நேரத்தை செலவிடுவதாலும் தேவையற்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நிலை ஏற்படும்.
எனவே விளையாடுவதற்கு மட்டுமே ஒன்று சேர வேண்டும் மற்ற நேரங்களில் கும்பலாக சுற்றி திரியக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரை வழங்கினார். மேலும் போலீசார் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ள இச்செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
The post குற்ற சம்பவங்களை தடுக்க இளைஞர்கள் தெருக்களில் கும்பலாக சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.