
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, பவுன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23-ந்தேதி, பவுன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் 'அட்சய திருதியை' தினமான நேற்று சென்னையில் உள்ள தங்க நகைக் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறந்து இருந்தன. பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு இருந்ததால் நகை வாங்க பல கடைகளில் வாடிக்கையாளர்கள் அலைமோதினர்.
அட்சய திருதியை தினமான நேற்று சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980-க்கும், பவுன் ரூ.71,840-க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும், விற்பனையானது. ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இந்த தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் 109 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.