
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும்.
அந்த வகையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள், கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலான தீர்மானங்கள் திமுக ஆட்சிக்கு எதிராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜகவுடன் மீண்டும் அதிமுக ஏன் கூட்டணி வைத்தது என்பது குறித்து செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டதை ஏற்காத மூத்த மற்றும் கடைநிலை நிர்வாகிகளிடம் பழனிசாமி கருத்து கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பின்னர், நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.