குர்ணால் பாண்ட்யா அபாரம்: மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி

4 hours ago 2

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - படிக்கல் அதிரடியாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. படிக்கல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனிடையே விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து வந்த கேப்டன் படிதாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூரு அணி வலுவான நிலையை எட்டியது. சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் டக் அவுட் ஆகினார். இருவரையும் ஒரே ஓவரில் ஹர்திக் வீழ்த்தினார்.

 

அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா (40 ரன்கள்) அதிரடியாக விளையாடி பெங்களூரு அணி 200 ரன்களை கடக்க உதவினார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 9 பந்துகளில் 17 ரன்கள் அடித்த நிலையில் யாஷ் தயாள் பந்தில் போல்டானார். நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடி உள்ள ரோகித் வெறும் 38 ரன்கள் மட்டுமே அடித்து தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

 

அவரைத்தொடர்ந்து ரியான் ரிக்கல்டனும் 17 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய வில் ஜாக்ஸ் 22 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக சூர்ய குமார் யாதவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் இரண்டு தடவை சூர்யகுமார் கொடுத்த கேட்சை தவற விட்டநிலையில், மூன்றாவது தடவையாக அவர் கொடுத்த கேட்சை லிவிங்ஸ்டன் கேட்ச் பிடித்து ஆர்.சி.பி. ரசிகர்களை குஷிப்படுத்தினார். 

 அடுத்ததாக திலக் வர்மாவுடன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி காட்டிய அதிரடியில் பெங்களூரு அணி பந்துவீச்சாளர்கள் மிரண்டு போயினர். தொடர்ந்து அதிரடி காட்டிய திலக் வர்மா தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.

 

இந்நிலையில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் திலக் வர்மா 56 (28) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த ஹர்திக் பாண்ட்யா 42 (15) ரன்களில் கேட்ச் ஆகி மும்பை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டநிலையில், முதல் பந்தில் சாண்டனர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் தீபக் சாஹர் (0) கேட்ச் ஆனார். அடுத்ததாக நமர் திர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக குர்ணால் பாண்ட்யா 4 விக்கெட்டுகளும், யாஸ் தயாள், ஹசில் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. இதன்படி பெங்களூரு அணி ஐ.பி.எல். 2025 தொடரில் 6 புள்ளிகளுடன் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

Read Entire Article