குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

1 month ago 6

மதுரை: குரூப் 1 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டோர் குறித்த விரிவான விசாரணை அறிக்கையை 15 நாட்களில் தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2021ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான சலுகையை பலர் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், ‘‘2019ல் நடந்த குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. போலியாக சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக 4 பேர் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் மூன்று பேர் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மட்டும் இந்த முறைகேடு நடந்ததா இல்லை வேறு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘2019ல் நடந்த குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்? அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? ஏன் இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட் கிளை 2021ல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாக செயல்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பதால் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை ஒவ்வொரு முறையும் பழைய விஷயங்களையே நீதிமன்றத்தில் கூறுகிறது. புதிது, புதிதாக கண்டுபிடித்து ஒவ்வொன்றாக காரணங்களை கூறுகின்றனர். நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளுக்கு துளியும் அச்ச உணர்வு கிடையாது. இது அரசு அலுவலர்கள் தவறுக்கு துணையாக இருப்பதையே காட்டுகிறது. அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையே நிறைவேற்றுவதில்லை’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இறுதியாக 15 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடும் உத்தரவுகளை பிறப்பிக்கப்படும். வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க நேரிடும்.

குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ் வழியில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டது? எத்தனை பேர் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்றனர். அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தற்போது வரை தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறித்த விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

* டிஎஸ்பி, ஆர்டிஓ உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு
குரூப் 1 தேர்வில் போலியாக தமிழ் வழி சான்று கொடுத்த விவகாரத்தில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த உதவி கமிஷனர் (மாநில வரிகள்) திருநங்கை ஸ்வப்னா (34), திருப்பாலையைச் சேர்ந்த கோவை கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் சங்கீதா (40), சேலம் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் (40), காஞ்சிபுரம் ஆர்டிஓ கலைவாணி (37), மதுரை மாவட்டம்,

பேரையூரைச் சேர்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூத்த கண்காணிப்பாளர் சத்யமூர்த்தி (62 – சஸ்பெண்ட்), பல்கலைக்கழக தொலைதூர கல்வித் திட்ட கண்காணிப்பாளர் புருஷோத்தமன் (59), தேனி மாவட்டம் பங்களாப்பட்டியைச் சேர்ந்த லைப் கல்வி அறக்கட்டளை நிர்வாகி முரளி (40), அறக்கட்டளை திட்ட அலுவலர் நாராயணபிரபு (41), கோவையைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article