பாலக்காடு : கேரளாவில் பிரசித்திப்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பக்தர்களுக்கு சிறிய மண் பாண்டங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
இதனை கோவில் கிழக்குக்கோபுர நடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவஸம் சேர்மன் டாக்டர் வி.கே.விஜயன் புதுமண தம்பதிக்கு மண் பாண்டம் வழங்கி தொடங்கி வைத்தார். கேரளாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுவதால் பறவையினங்கள் தண்ணீருக்காக அலைந்து திரிகின்றன.
இதனால் இவை தாகம் தீர்க்க வைக்கும் வகையில் ஸ்ரீமன் நாராயணன் மிஷன் சார்பில் குருவாயூர் கோயிலுக்கு சிறிய மண் பாண்டங்கள் (குடுவைகள்) வழங்கியது.
இதனை பக்தர்களுக்கு குருவாயூர் தேவஸ்தானம் இலவசமாக தற்போது வழங்கி வருகிறது.கடந்தாண்டு 1001 மண் குடுவைகளை இந்த அமைப்பினர் வழங்கினர். இந்தாண்டு 5001 மண் பாண்ட குடுவைகள் வழங்கியுள்ளது.
இதனால் குருவாயூர் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு மண் பாண்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் தண்ணீர் நிரப்பி பறவைகளுக்கு வைக்குமாறு அறிவுரை வழங்கி வருகின்றனர். ஏப்ரல், மே ஆகிய 2 மாத காலம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஏப்ரல் முதல் தேதி முதல் மே 31 ம் தேதி வரை கோவில் நடை பிற்பகல் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டது.
The post குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பக்தர்களுக்கு மண் பாண்டங்கள் இலவசமாக விநியோகம் appeared first on Dinakaran.