ஏரல்: குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இன்று ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழா சிகர விழாவாக நடைபெறும். இவ்விழா கால்நாட்டு விழாவுடன் தொடங்கி 15வது நாள் கொடை விழா நடைபெறும். இதில் தமிழகமெங்கும் இருந்து பக்தர்கள் அரசு பஸ், கார், வேன் மற்றும் பாரம்பரிய மாட்டு வண்டிகளில் கோயில் வந்திருந்து அங்குள்ள தாமிரபரணி ஆற்று கரையோரப் பகுதிகளில் தங்கியிருந்து ஆற்றில் நீராடி அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.
இந்த ஆண்டு ஆனி கொடை விழா கடந்த 1ம்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய ஆனிப் பெருந்திருவிழா 15ம்தேதியான இன்று செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு சிறப்பு பூஜை, 2 மணிக்கு ஸ்ரீநாராயண சுவாமி சின்ன சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே மாவிளக்கு எடுத்தல், கொழுக்கட்டை வைத்து படைத்தல், மரத்திலான கை, கால் வாங்கி தங்களது நேமிச்சை கடன்களை செலுத்தி வந்தனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
தமிழகமெங்கும் இருந்து வந்த பக்தர்கள் கோயில் வளாகம், தாமிரபரணி ஆற்று கரையோரப் பகுதிகளில் தற்காலிக குடிசை அமைத்து கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக தங்கியுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உட்பட முக்கிய பகுதிகளில் இருந்து கோயில் சென்று வருவதற்கு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து திருவிழா சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் குரங்கணி அறுபது பங்கு நாடார்கள் மற்றும் ஊர் மக்கள் செய்து உள்ளனர். 16ம்தேதி நாளை புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு பூஜை, 2 மணிக்கு நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி திருவிதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
The post குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இன்று ஆனிப் பெருந்திருவிழா: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.